சென்னை: ‘தமிழக மக்களை இருளில் தவிக்கவிட வேண்டாம். தொடர் மின்வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் முதல்வர் விஜய்?’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் தொடந்து நடந்து வரும் மின்வெட்டால் மக்களை இருட்டில் மூழ்கடித்துள்ளது முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி. மின்வெட்டால் மக்கள் மட்டுமல்ல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மொத்த மின் தேவையில் தமிழகத்தின் வெளிசார்பு 19,126 மெகாவாட். மின்வாரியத்தின் மொத்தக்கடன் ரூ.2.50 லட்சம் கோடி ஆகும். கடந்த திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளுக்கான மின் கட்டண உயர்வு ரூ.45,000 கோடி. 5700 மெகாவாட், பல மின் உற்பத்தி திட்டங்கள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அனல்மின் திட்டங்களால் மின் நிலையங்களின் உற்பத்தி கால தாமதமாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி தேவைப்படும். அதற்கு என்ன திட்டங்கள் உள்ளன என்பதை த.வெ.க அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தமிழகத்தின் மின் சுய சார்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்? இவரது நிலைப்பாட்டை சட்டசபையில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
அதிக விலைகொடுத்து தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதால்தான் மின்வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மொத்த மின் உற்பத்தியை அதிகரிக்க மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதே மின்வெட்டு நிலை தொடரும். தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதுபட்டு சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் மின் உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் மக்களுக்கு அத்தியாவசிய தேவை. அதுபோல மின்சாரம் மாநில அரசின் அத்தியாவசிய சேவை என்ற புரிதல் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும். "நான் ஒரு தூயசக்தி. என்னிடம் வாருங்கள். எல்லாம் கிடைக்கும்" என்று சொன்ன விஜய், தற்போது நடந்துவரும் தொடர் மின்வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? தமிழக மக்களை இருளில் தவிக்கவிட வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.