பேக் பைப்பர் இசைக் கருவியை பயன்படுத்தி இசைக்கும் வெலிங்டன் ராணுவ வீரர்கள்.
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு உள்ள ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்திய இசைக் குழுவில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
இதில் ஆங்கிலேயர் காலத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பேக் பைப்பர் எனப்படும் இசைக்கருவி இசைக்கப்பட்டு வருகிறது.
1600-ம் ஆண்டுகளில் ஸ்காட்லாந்து ரெஜிமென்ட் பிரிவுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த இசைக்கருவி தற்போதும் குன்னூர் ராணுவ வீரர்கள் குழுவினரால் இசைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ராணுவ பேண்ட் வாத்திய இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி குன்னூர் ஜிம்கானாவில் நடைபெற்றது. இதில், இசைக்கு ஏற்ப பேக் பைப் இசையை இசைத்தது பார்வையாளர்களை கவர்ந்தது. இந்தக் குழுவினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பேண்ட் வாத்திய இசையில் இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.