தமிழகம்

பொங்கல் இலவச சேலை புதிய ரகத்துக்கு கூலி நிர்ணயம் செய்யக் கோரி ராஜபாளையம் அருகே நெசவாளர்கள் மறியல்

அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் கூட்டுறவு சங்க நெசவாளர்கள் சார்பில், பொங்கல் இலவச சேலை புதிய ரகத்துக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வட்டாரங்களில் உள்ள 29 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்கும் இலவச சேலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

2027 பொங்கல் பண்டிகைக்கு புதிய ரக சேலை அறிமுகப்படுத்தியதால் ஏற்ககெனவே நெசவு செய்த பழைய ரக சேலைகள் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. புதிய ரக பணிகள் காரணமாக கடந்த 4 மாதங்களாக நூல் வழங்கப்படாததால் நெசவாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

வேலை இழப்புக்கு நிவாரணம், கூலி உயர்வு, பழைய சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் கஞ்சி தொட்டி, பிச்சை எடுக்கும் போராட்டம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டப்பேரவை கைத்தறி துறை மானிய கோரிக்கையின் போது, நெசவாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய சேலை ரகத்திற்கான கூலி நிர்ணயம் செய்ய வேண்டும், 4 மாத வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும், நெசவாளர்கள் கையில் உள்ள இருப்புச் சேலைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி அரசரடி பேருந்து நிறுத்தம் முன் நெசவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியத்தில் புதிய ரக சேலைக்கு ரூ.170 கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். 4 மாத வேலையிழப்புக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம், ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம், இருப்பு சேலைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஊர்வலமாக சென்று, கூட்டுறவு சங்கம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT