தமிழகம்

கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அக்.4-ல் கனமழைக்கு வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் அக்.4-ம் தேதி கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிருந்து கேரளம் - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.3) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அக்.4-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அக்.5, 6 தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அக்.7, 8 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.3ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைப் பொழிவு- தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணை, கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 6 செ.மீ, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, வெங்கடேஷ்வரபுரம், கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு, இரணியல், பாலூர், கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.”என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT