தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் பிப்.20 முதல் 24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 20 முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நாளை வலுப்பெறக்கூடும்.

          

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மறுதினம் தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

21, 22 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, மிதமான மழையும், 23, 24 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT