

அருண் ராஜ்
சென்னை: “மனதுக்குள் கோவை மக்கள் மீது இவ்வளவு வெறுப்பை வைத்துக் கொண்டு, கோவையில் இருந்து வெற்றியைத் தொடங்க முதல்வர் பேராசைப்படலாமா?” என தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தயாநிதி மாறனும், செந்தில் பாலாஜியும் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன், கோவை மக்களை இழிவாகச் சித்தரித்துக் கிண்டல் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
பண்புக்கும், மரியாதைக்கும் பெயர் பெற்ற கோவை மக்களை, 'அடுத்தவர்களைக் கெடுப்பவர்கள்' எனக் கெட்ட எண்ணத்துடன் எம்.பி. தயாநிதி மாறன் பேச, மேடையிலேயே அமர்ந்திருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்துக் கொண்டிருக்கிறார். மக்களை மரியாதையாக நடத்தினால் தான், மக்களும் உங்களை மதித்து ஓட்டுப் போடுவார்கள். ஆனால், திமுகவினருக்கு மக்களை மரியாதையாக நடத்தத் தெரியவே தெரியாது என்பதற்குப் பொது வெளியில் பல உதாரணங்கள் உள்ளன.
கோவை மக்கள் மீது திமுகவினருக்கு எந்த அளவுக்குத் தனிப்பட்ட வன்மம் இருக்கிறது என்பதைத் தயாநிதி மாறனின் பேச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆகையால், எம்.பி. தயாநிதி மாறனும், செந்தில் பாலாஜியும் கோவை மக்கள் முன்பாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மனதுக்குள் கோவை மக்கள் மீது இவ்வளவு வெறுப்பை வைத்துக் கொண்டு, கோவையில் இருந்து வெற்றியைத் தொடங்க முதல்வர் பேராசைப்படலாமா?
கவலைப்படாதீர்கள் முதல்வரே... இந்த முறை வழக்கம் போல கோவையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தோல்வியைச் சந்திப்பீர்கள்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரூரில் நேற்று திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எம்.பி தயாநிதி மாறன், ‘கோவை மக்கள், அவர்கள் ஊரைக் கெடுக்காமல் பக்கத்து ஊரை கெடுப்பார்கள்’ என்று பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.