சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதனால் 15, 16-ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக் கூடும். சுமார் 1.5 கி.மீ. உயரத்திலிருந்து 4.5 கி.மீ உயரம் வரை காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் மையப் பகுதிகளிலிருந்து தெற்கு லட்சத்தீவு பகுதிகள் வரை, தென் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (மே 12) தென் தமிழகம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், 13, 14-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
15, 16-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 17-ம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
15, 16-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.