கோப்புப் படம்

 
தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாட்டங்களில் நாளை (செப்.16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.17) நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

18-ம் தேதி  நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும்,  இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

19-ம் தேதி  நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இதர வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும்,  தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

20-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம்,  தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

21, 22 தேதிகளில் வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் 11 செமீ, திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர்,  ஆண்டியப்பனூர், கிருஷ்ணகிரி மாவட்டம் உலிபெண்டாவில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT