சென்னை: இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இதன்காரணமாக, இன்று (பிப்.22) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி. ஆர். துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 24 மணி நேரத்தில், தென் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு அணை, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையில் தலா 5 செ.மீ., கன்னியாகுமரி புத்தன் அணையில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வலுவடைந்தது காற்றழுத்தத்தாழ்வு பகுதி:
இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சனிக்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து,அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேற்கு-வடமேற்கு திசை நகரும். பிறகு, வடகிழக்கு திசையிலும் நகரக்கூடும்.
இதுதவிர, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (பிப்.22) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும் பெய்யக்கூடும். மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
பிப்.23,24 ஆகிய தேதிகளில், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
பிப்.25-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். பிப்.26-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு:
பிப்.23,24 ஆகிய தேதிகளில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையில்...: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மன்னார்வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், கேரளா கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் இன்றும், நாளையும் பலத்த சூறாவளி காற்று வீசும். இதுதவிர, பிப்.24-ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி நாட்களில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.