

ராணி வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் நயினார் நாகேந்திரன்.
சிவகங்கை: மத்திய, மாநில அரசுகள் எப்போதும் இணைந்து செயல்படுவது தான் ஒரு பகுதி முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் தங்கக் கோபுர கும்பாபிஷேகம் பிப். 6-ம் தேதி நடைபெற்றது. இதற்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று அக்கோயிலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வந்தார். இதற்காக அவர் மதுரையிலிருந்து ஹெலிகாப்டரில் திருப்பத்தூர் வந்தார். அவரை கார்த்திசிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவெற்றனர்.
அங்கிருந்து காரில் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலுக்கு வந்தார். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்டத் தலைவர் பாண்டித்துரை ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், காரில் சிவகங்கை அரண்மனைக்கு வந்த அவரை சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், சமஸ்தான மகேஸ்துரை, இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில்தொண்டமான் உள்ளிட்டோர் வரவேற்றார்.
பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அரண்மனை வளாகத்தில் இருந்த மன்னர் சசிவர்ணதேவர், ராணி வேலுநாச்சியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரண்மனை பொருட்களையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணி வேலுநாச்சியார் மட்டும் தான் இழந்த அரசை போர் புரிந்து மீண்டும் கைப்பற்றியவர். வீரம் விளைந்த மண் சிவகங்கை. மகத்தான சரித்திரத்துக்கு சொந்தமானது. மத்திய, மாநில அரசுகள் எப்போதும் இணைந்து செயல்படுவது தான் ஒரு பகுதி முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்திருந்தார். அதை 18 சதவீதமாக குறைத்துள்ளனர். நிச்சயமாக இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து காவி உடைந்து அணிந்து சிலைகளுக்கு மரியாதை செலுத்தியுள்ளீர்களே, அதில் எதுவும் விஷேசம் உண்டா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, நீங்கள் கூட வயது முதிர்வு அடைந்தால் காவி உடைக்கு மாறி விடுவீர்கள், என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி, சிவகங்கை அரண்மனைவாசலில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரண்மனையிலிருந்து சி.பி.ராதாகிருஷ்ணன் காரில் வெளியே வந்தார்.
அப்போது தடையை மீறி அதிக ஒலி எழுப்பிக் கொண்டே இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்தார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அவரை வாகனத்துடன் மடக்கி பிடித்தனர். விசாரணைில், அவர் காளையார்கோவில் அருகே சிலுக்கப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் கருணாகரன் (45) என்பதும், குடியரசு துணைத் தலைவர் வாகனம் செல்வதை அறியாமல் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். குடியரசு துணைத் தலைவர் சென்றதும் கடைகள் திறக்கப்பட்டன.