தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மார்ச் 2 முதல் வெப்பநிலை உயர வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி முதல் வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (மார்ச் 1), நாளை மறுதினமும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

3 முதல் 6-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 6 செமீ, தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செமீ, கோவை மாவட்டம் வால்பாறையில் 3 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, மைலாடியில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT