‘சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்!’ - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

‘சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்!’ - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
Updated on
1 min read

வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்' என்று அந்நாட்டுக்கு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் பகிர்ந்த பதிவில், “ஈரானின் புரட்சிகர இஸ்லாமியப் படையினருக்கும், ஆயுதப் படைகளுக்கும், காவல் துறைக்கும், நான் இன்றிரவு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன். உங்கள் ஆயுதங்களைத் துறந்து சரணடையுங்கள்... உங்கள் மீதான நடவடிக்கைகள் நிறுத்தப்படும். இல்லாவிட்டால், உறுதியாக மரணத்தை எதிர்கொள்வீர்கள்” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதல், ஈரான் தனது அணுசக்தி மையங்களில் மீள்கட்டமைப்பு செய்வதை தடுக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டதாகவும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாக ஈரான் மீது தீவிரத் தாக்குதலை தொடங்கியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ (Operation Epic Fury) என்று பெயரிடப்பட்டுள்ளது. பதிலடிக்கு ‘ஆபரேஷன் ரோர் ஆஃப் தி லயன்’ ( Operation Roar of the Lion ) என்று ஈரான் பெயர் வைத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் - அமெரிக்க ராணுவ கூட்டுத் தாக்குதல் ஈரானின் அரசு கட்டிடங்கள், ராணுவ நிலைகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அதிகாரபூர்வ அலுவலகத்தையும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியை ட்ரம்ப் வெளிப்படுத்திய சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அணுகுண்டை தயாரிக்க மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என்பதுதான அமெரிக்காவின் நிபந்தனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தத் தாக்குதலை ட்ரம்ப் புகழ்ந்துள்ளார். “அமெரிக்கர்களுக்கான அச்சுறுத்தல்களை துடைத்தெறியும் தாக்குதல் இது. ஈரான் மீள் கட்டமைக்கும் அணு ஆயுதங்களை அழிப்பதே எங்களின் திட்டம். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அமெரிக்க ஒருபோதும் அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.

ஈரான் ராணுவம், காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப், ஈரான் மக்களுக்கான ஒரு செய்தியையும் கூறியுள்ளார்.

அதில் ட்ரம்ப், “சக்திவாய்ந்த ஈரானிய மக்களே, இன்றிரவு உங்களுக்கு நீங்கள் விரும்பிய சுதந்திரம் கைகளில் கிட்டும். அதுவரை பாதுகாப்பாக இருங்கள். வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள். வெளியே ஆபத்துள்ளது. குண்டுகள் எங்கு வேண்டுமானாலும் விழக்கூடும். எல்லாம் முடியட்டும். உங்களுக்கான அரசை நீங்களே உருவாக்குங்கள். அது உங்களிடமே விடப்படும்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

‘சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்!’ - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
Three of Us: ஷைலஜாவின் மறதியும் நினைவுகளும் கடத்தும் அனுபவம் | திரை தேவதைகள் 07

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in