‘நாடாளுமன்றத்தில் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்’ என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது சாதாரணமானதுதான். திமுக கூட்டணியில் இருந்து விலகியதால், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துவிடவில்லை. கள அளவில் இரு கட்சித் தொண்டர்களிடையே இணக்கம் இல்லை. நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அடிமட்ட அளவில் திமுக எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடத்தியது.
உள்ளாட்சித் தேர்தல்களில்கூட முறையான அதிகாரப் பகிர்வு இல்லை. இதனால், நீண்டகால அரசியலைக் கருத்தில்கொண்டு புதிய கட்சியுடன் பயணிக்க டெல்லி மேலிடம் முடிவெடுத்தது. திமுக, காங்கிரஸ் பிரிவு சற்று கசப்பானது என்றாலும், நாடாளுமன்றத்தில் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.
தவெகவுடன் கூட்டணி தற்போதைக்கு சுமுகமாக உள்ளது. 1967-க்குப் பிறகு இப்போதுதான் மாநில அரசில் பங்கு பெற்றுள்ளோம். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்தான் இந்த கூட்டணியின் உண்மையான சோதனைக்களம்.
முதல்வர் விஜய், தான் ஒரு மதச்சார்பற்றவர் என்பதைத் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார். தவெக மதச்சார்பற்ற கட்சி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. புதிய கட்சி என்பதால் அவர்களுக்கு கால அவகாசம் தேவை.
நமது வீடுகளுக்குள்ளேயே அமைதியாக நடந்த தவெகவின் ‘நுண்ணியப் பிரச்சாரத்தை’ பாரம்பரிய கட்சிகள் கவனிக்கத் தவறிவிட்டன. உளவுத் துறை, தேர்தல் கணிப்பாளர்கள் என அனைவருமே தவெகவின் பலத்தை தவறாகக் கணித்துவிட்டோம். மக்கள் சின்னத்துக்கும், கட்சிக்கும், விஜய்க்கும் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமூக ஊடகப் பிரச்சாரத்தை நாம் சாதாரணமாக நினைத்துவிட்டோம்” என்று அவர் கூறினார்.