“மறந்து விடாதீர்கள்... தவெக ஆட்சி நடப்பதே நமது தயவில் தான்!” - மு.க.ஸ்டாலின் பேச்சு

“மறந்து விடாதீர்கள்... தவெக ஆட்சி நடப்பதே நமது தயவில் தான்!” - மு.க.ஸ்டாலின் பேச்சு
Updated on
2 min read

சென்னை: “நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடுதான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடந்தது.

அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “எப்போதுமே ஓர் இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்துக்குப் பிரிந்து போகிறார்கள் என்று சொன்னால், ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து, ஏதோ வசதியை மனதில் கொண்டு, ஆளுங்கட்சியை நோக்கித்தான் அதிகமாகப் போவது உண்டு. அதைத்தான் நாமும் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இன்றைக்கு திமுக ஆளுங்கட்சி அல்ல; ஆளுங்கட்சியாக இருந்து, இப்போது எதிர்க்கட்சியாக மாறி இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சியை நோக்கி நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், பதவிக்காக நீங்கள் வரவில்லை, சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லாம் வரவில்லை. பணியாற்ற வேண்டும், இந்த இயக்கத்திற்குத் துணை நிற்க வேண்டும், தமிழ் சமுதாயத்திற்கு நாம் பாடுபட வேண்டும், இழந்திருக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வந்திருக்கிறீர்கள்.

வெற்றி, தோல்வி என்பது நம்மைப் பொறுத்தவரையில் மாறி மாறி வரும். அதற்காக வெற்றியைக் கண்டு வெறி கொண்டு அலைந்து கொண்டிருப்பதும் இல்லை; தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் என்றைக்கும் பணியாற்றக் கூடியவன்தான் திமுககாரன் என்பதை இன்றைக்கு நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில்தான், இன்றைக்கு வெற்றி வாய்ப்பை நாம் இழந்திருந்தாலும், ஆட்சிப் பொறுப்பை நாம் இழந்திருந்தாலும், எதிர்க்கட்சி என்ற நிலையில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், நீங்கள் எல்லாம் இங்கு கஜேந்திரன் தலைமையில் வந்து சேர்ந்திருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஏனென்றால், நாம் வெற்றி பெற வேண்டும்; திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்; எதிர்க்கட்சிகள் எல்லாம் தோற்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் தேர்தல் களத்தைச் சந்தித்தோம். நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று கருதி நம்மோடு கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடுதான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

அந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள், "நாங்கள் வருகிறபோது, எங்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடத்தில் சொல்லிவிட்டுத் தான் வந்திருக்கிறோம்" என்று சொன்னார்கள்.

அவர்கள் சொல்லிவிட்டுச் செல்லுகிற நேரத்தில் நான் சொன்னேன், "நீங்கள் செல்லுங்கள்; உங்களுடைய விருப்பம்; உங்களுக்கு இருக்கும் ஜனநாயகம்; நான் தடுக்க மாட்டேன். நாட்டிலே ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது; அதன் மூலமாக பாஜக ஆட்சி தமிழ்நாட்டில் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் அவர்களை நான் வழியனுப்பி வைத்தேன். எனவே, நம்முடைய தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நிகழ்ச்சியில் உறுதி எடுப்போம்” என்று ஸ்டாலின் பேசினார்.

“மறந்து விடாதீர்கள்... தவெக ஆட்சி நடப்பதே நமது தயவில் தான்!” - மு.க.ஸ்டாலின் பேச்சு
“யதார்த்த உலகில் வாழுங்கள்” - மொஜ்தபா கமேனியை சந்திக்க விரும்பும் ட்ரம்ப்புக்கு ஈரான் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in