திருப்பூர்: விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது போல், தொழிலாளர் 4 சட்டத் தொகுப்பையும் திரும்பப் பெறும் வகையில் கடும் போராட்டத்தை முன்னெடுப்போம் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நவ.21-ம் தேதி முதல் கொண்டு வந்த 4 சட்டத் தொகுப்புகளை பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார்.
மோடி ஒரு விஷயத்தை புகழ்ந்து பேசினால் அதனை நாம் எதிர்மறையாக புரிந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களை கொத்தடிமைகளாக மாற்றும் உள்ளடக்கத்தை கொண்டது இந்த புதிய சட்டத் தொகுப்பு.
பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலையற்ற தன்மை மற்றும் தொழிற்சாலை சட்டங்களை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால வேளை என்ற அடிப்படை இதில் இல்லை. எந்த நிறுவனத்திலும், நிரந்தரத் தொழிலாளர் இல்லாத சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
இந்தியாவில் 74 சதவீதம் 300-க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்ட தொழிற்சாலைகள் தான் உள்ளன. தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது, கைது செய்யவும், அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படை உரிமை ஆங்கிலேயர் காலத்தில் கூட இருந்தது.
அகில இந்திய கட்டுமான வாரியத்தில் ரூ.38 ஆயிரம் கோடி உள்ளது. அதனை பற்றிய எவ்வித அறிவிப்பும் 4 சட்டத்தொகுப்பில் இல்லை. இனி அந்த பணம் எங்கு செல்லும் என புரியவில்லை? அதேபோல் நலவாரியம், தொழிலாளர் நீதிமன்றம், தொழிலாளர் முறையிடும் ஆணையம் உள்ளிட்டவை இல்லை.
தமிழ்நாட்டில் திமுக அரசு 4 சட்டத் தொகுப்புகளை எதிர்க்கிறது. தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதனை விருப்பம் போல் மாநிலங்கள் உயர்த்திக் கொள்ளலாம் என தெரிவித்திருப்பது கொத்தடிமை முறைக்கு தொழிலாளர்களை தள்ளும்.
இந்தியாவில் 90 சதவீதம் முறைசாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. மத்திய அரசின் 4 சட்டத்தொகுப்புகளை எதிர்த்து இனி தீவிரமாக போராட உள்ளோம். போராட்டத்தின் மூலம் அரசின் 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறும் முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்வோம்.
விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற்றது போல் இந்த சட்டத்தையும் திரும்பப் பெறும் வகையில் அகில இந்திய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்.
கடந்தமுறை போட்டியிட்டதை விட திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகளை கட்சித் தலைமை கேட்கும். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது பேச்சுவார்த்தை தொடங்கும் போது தெரிய வரும்” என்று அவர் கூறினார். இதில் மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.