பிரதமர் மோடி.
புதுடெல்லி: “திரிணமூல் காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவர், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை அவமதித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸின் திமிர்பிடித்த அரசியல் விரைவில் தோற்கடிக்கப்படும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
இதுகுறித்து இன்று புது டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று நாடு மகளிர் தினத்தை கொண்டாடும் வேளையில், மிகவும் வேதனையான ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நேற்று, திரிணமூல் அரசு குடியரசுத் தலைவரை அவமதித்தது. சந்தால் சமூகத்தின் புனித நிகழ்வில் பங்கேற்க அவர் அங்கு சென்றிருந்தார், ஆனால் திரிணமூல் அரசு, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்குப் பதிலாக, நிகழ்வைப் புறக்கணித்தது.
குடியரசுத் தலைவர் முர்மு ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர், சந்தால் சமூகத்தின் மேம்பாட்டுக்காக நிறைய பாடுபட்டுள்ளார். குடியரசுத் தலைவருக்கு நடந்த இந்த சம்பவம் இதயத்தை உடைக்கும் வகையில் இருந்தது. அந்த நிகழ்வுக்கு திரிணமூல் அரசு சரியான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. இது குடியரசுத் தலைவர், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் ஆன்மா மற்றும் நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஒரு அவமானம். திரிணமூல் காங்கிரஸ் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவமதித்துள்ளது.
இன்று, தேசியத் தலைநகர் டெல்லியில் இருந்து சொல்கிறேன். ஒரு ஆதிவாசியை அவமதிக்கும் திரிணமூல் கட்சியின் அரசியல் விரைவில் தோற்கடிக்கப்படும். திரிணமூல் காங்கிரஸ் கட்சி திமிர்பிடித்தது. அதிகாரத்தில் மிகவும் திமிர்பிடித்தவர்களும், மது போதையில் இருப்பவர்களும் இறுதியில் அழிக்கப்படுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது:என்று கூறினார்.
பின்னணி என்ன?: மேற்குவங்கத்தின் கோசாய்பூரில் நேற்று சந்தாலி பழங்குடியினரின் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பாக்டோக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கினார். ஆனால் சிலிகுரி மேயர் கவுதம் தேவ் மட்டுமே விமான நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளித்தார்.
இதன்பிறகு பழங்குடியினர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது: அரசு மரபின்படி என்னை வரவேற்க முதல்வரோ, மாநில அமைச்சரோ வந்திருக்க வேண்டும். அவர்கள் வரவில்லை. முதல்வர் மம்தா என் மீது அதிருப்தியில் இருக்கிறாரா? எதுவாக இருந்தாலும் இந்த விவகாரத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
சிலிகுரி அருகேயுள்ள பிதான் நகரில் சந்தாலி பழங்குடியினர் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாநில அரசு திடீரென கோசாய்பூருக்கு மாநாட்டை மாற்றி உள்ளது. இந்த இடம் மிகவும் சிறியது. இதில் பெருந்திரளானோர் பங்கேற்க முடியாது. முதல்வர் மம்தா எனக்கு தங்கை போன்றவர். மாநாடு இடத்தை மாற்றியது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்குவங்க அரசு மேற்கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். இவ்வாறு முர்மு பேசினார்.