நெல்லை முபாரக்
திமுக கூட்டணியில் தங்களுக்கு 3 இடங்களை கேட்டுள்ளதாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக உடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. 3 தொகுதிகள் கேட்டுள்ளோம். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் தொகுதி பங்கீடு குறித்த முழு விவரத்தை அறிவிப்போம். நான் போட்டியிடுவது உள்ளிட்ட எந்த விஷயத்தையும் தீர்மானிக்கவில்லை.
உதயசூரியன் சின்னத்தில் எங்கள் கட்சி போட்டியிடுவது என எங்கள் கட்சியின் செயற்குழு கூடி முடிவெடுத்தது. இந்த விஷயத்தில் திமுக எந்த நிர்ப்பந்தத்தையும் கொடுக்கவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலையில் திமுக கூட்டணி செயல்படுகிறது.
விஜய் வந்தால் மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார் என மக்கள் நினைத்தார்கள். ஆனால், சாதாரண மக்கள் கூட அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இப்தார் நோன்பில் இஸ்லாமியர் களுக்கு ஆதரவாக விஜய் பேசுகிறார் ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மவுனமாக இருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.