தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று பேசிய முதல்வர் விஜய்.
சென்னை: ‘‘நமக்கு எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம். எனவே, மத்திய அரசுடன் கண்மூடித்தனமான மோதலை விரும்பவில்லை’’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தொடரின் கடைசி நாளான நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்து முதல்வர் விஜய் பேசியதாவது: நமது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள், சிலரின் திட்டமிட்ட நடவடிக்கைகள் மின்வெட்டுக்குக் காரணமாக இருக்கின்றன.
விரைவில் இந்த மின்வெட்டு நிலைமை அறவே நீக்கப்படும். சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே போல், பெண்கள் பாதிக்கப்படுவதையும் இங்கு யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. அதற்கான கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அதேபோல், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நம் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.
இவை எல்லாம் பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சினைகள். கடந்த 10 மாதங்களாக நமது மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி இல்லை. கடந்த ஆட்சியில் நடந்ததற்கு எல்லாம் நமது ஆட்சியில்தான் விடையே கண்டுபிடித்து இருக்கிறோம். போதைப் பொருள் நடமாட்டம் தாறுமாறாக பரவியுள்ளது. இவற்றை எல்லாம் ஆரம்பக் கட்டத்திலேயே யார் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அப்போது காவல் துறை யார் கட்டுப்பாட்டில் இருந்தது. காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆரம்பக் கட்டத்திலேயே போதைப் பொருள் நடமாட்டத்தை ஏன் கட்டுப்படுத்தவில்லை? நம்முடன் சேர்த்து மக்கள் மீதும் அவதூறு பரப்புகிறார்கள்.
மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டதும், குடும்பம் குடும்பமாக மக்கள் ஆதரவு தெரிவித்ததும் தவறு என்கிறார்கள். இது இப்போது இல்லை. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இருக்கிறது. எம்ஜிஆர் வெற்றி பெற்ற போது, அப்போதும் மக்களைத் தவறாகப் பேசியிருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக ஒரே ‘டெக்னிக்'. தொழில்நுட்பம் எல்லாம் மாறி வேறு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. கொஞ்சம் டெக்னிக்கையாவது மாற்ற வேண்டும். மக்களுக்கு பயனுள்ள ஆக்கப்பூர்வமான கருத்துகள் இருந்தால் சொல்லலாம்.
5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடியது. பேசு பேசு என்றால் அப்புறம் நான் என்ன செய்வது? ஆளுநர் உரையன்று, தேசிய கீதம் 2 முறை பாடினது தவறு. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. மரபையே மாற்றி விட்டீர்கள் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறினர். கடந்த 2021 ஆகஸ்ட் 2-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தேசிய கீதத்தைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள்.
அது ஞாபகம் இருக்கிறதா? தேசிய கீதத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பும், அதே நிகழ்ச்சியில் 2 முறையும் பாடப்பட்டது நினைவில் இருக்கிறதா? இதை கேட்டால் அது குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்று சொல்வார்கள். நமது அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாதுதான். எங்கள் எம்எல்ஏக்களுக்கு மக்கள் பணி செய்ய தெரிந்த அளவுக்கு, மக்கள் பணத்தை சுருட்ட தெரியாதுதான்.
உங்களைப் போல் முறைகேடுகள் செய்வதை நாங்கள் தெரிந்து கொள்ள போவதில்லை. நமது அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்குப் பக்க பலமாகவும், உறுதுணையாகவும் நிற்கும். நாம் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையைக் கொண்டவர்கள்தான். தற்போதைய மத்திய அரசு சார்ந்த கட்சியின் அரசியலில் கொள்கை அளவில் நேர் எதிராக நிற்கிறோம். அதே நேரத்தில் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்புபவர்கள் அல்ல. நமக்கு எப்போதும் தமிழக வளர்ச்சி மட்டும்தான் முக்கியம்.
அதற்காக நம்முடைய அரசியல் ரீதியான கொள்கைகளையோ, மாநில உரிமைகளையோ கொஞ்சமும் விட்டு தரமாட்டோம். எனவே, நம் மக்களுக்கோ, சிறுபான்மை சகோதர்களுக்கோ, ஆதரவு இயக்கங்களுக்கோ எவ்வித சந்தேகமும் வேண்டாம். நாம் யாருடைய அணியும் இல்லை. மாநில உரிமையில் எப்போதும் உறுதியாக இருப்போம். அரசியல் வேறு, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் நிர்வாக அணுகுமுறை வேறு. இதில் தெளிவாக இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.