சென்னை: நீருந்து நிலைய பிரதான குடிநீர் குழாய் மாற்றும் பணி காரணமாக வரும் 22-ம் தேதி காலை 10 மணி முதல் 24-ம் தேதி காலை 10 மணி வரை திருவொற்றியூர், மணலி பகுதியில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மணலி காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவொற்றியூர் நீருந்து நிலையத்தில் பிரதான குடிநீர் குழாயை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் 22-ம் தேதி (திங்கள்) காலை 10 மணி முதல் 24-ம் தேதி வரை காலை 10 மணி வரை அந்த நீருந்து நிலையமும், மணலி நீருந்து நிலையமும் தற்காலிகமாக செயல்படாது.
திருவொற்றியூர், மணலி மண்டலங்களுக்கு உட்பட்ட கத்திவாக்கம், எண்ணூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சடையன்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்து பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.