மானூர் பள்ளமடை பகுதியில் பயிரிட்டுள்ள கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறி தோட்டங்களுக்கு டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
படம்: மு. லெட்சுமி அருண்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் சுட்டெரிக்கும் வெயிலால் பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெயிலில் இருந்து காய்கறி செடிகளை பாதுகாக்க டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து விவசாயிகள் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடையை விஞ்சும் வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் மாவட்டத்திலுள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. ஏராளமான குளங்களும் வறண்டு வருகின்றன.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,098 குளங்களில் 431 கால்வரத்து குளங்களும், 326 மானாவாரி குளங்களுமாக மொத்தம் 757 குளங்கள் வறண்டுள்ளதாக வேளாண்மைத்துறை கணக்கிட்டுள்ளது.
மேலும் 21 குளங்களில் 3 மாதங்களுக்கு தேவையான நீர் இருப்பு உள்ளது. இதுபோல் 31 குளங்களில் 2 மாதங்களுக்கு தேவையான தண்ணீரும், 289 குளங்களில் 1 மாதத்துக்கு தேவையான நீரும் இருப்பில் உள்ளது.
இதுபோல் மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளில் தற்போது மொத்தம் 30.25 சதவீதம் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் அணைகளில் 62.87 சதவீதம் தண்ணீர் இருந்தது.
நேற்று காலை 8 மணிநிலவரப்படி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்): பாபநாசம்- 62.90 அடி (143 அடி), சேர்வலாறு- 74.64 அடி (156 அடி), மணிமுத்தாறு- 69.31 (118), வடக்கு பச்சையாறு- 6 (50), நம்பியாறு- 14 (22.96), கொடுமுடியாறு- 29 (52.50). சேர்வலாறு அணைப்பகுதியில் 1 மி.மீ. மழை பெய்திருந்தது.
மழை பொய்த்துவிட்டதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலுள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துவிட்டது. பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி அருகே மானூர் பள்ளமடை பகுதியில் பயிரிட்டுள்ள குறுகிய கால பயிர்களான கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறி தோட்டங்களுக்கு டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.