தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த 25-ம் தேதி காலை 6 மணிக்கு விநாடிக்கு 700 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3,000 கனஅடியாக உயர்ந்தது.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 38 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 50 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து குறைவாக உள்ளதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 88 அடியிலிருந்து 87.79 அடியாகவும், நீர் இருப்பு 50.40 டிஎம்சியிலிருந்து 50.16 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.