தமிழகம்

ஆரம்ப சுகாதார நிலைய தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.7,376 ஆக உயர்வு

ஆணைகளை வழங்கினார் சுகாதாரத் துறை அமைச்சர்

செய்திப்பிரிவு

சென்னை: ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் பணி​யாற்​றும் பேறு​சார் குழந்​தைகள் நலத்​திட்ட தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு மாத ஊதி​யம் ரூ.1,500-ல் இருந்து ரூ.7,376 ஆக உயர்த்தி சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் ஆணை​களை வழங்​கி​னார்.

அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் பணி​யாற்​றும் பேறு​சார் குழந்​தைகள் நலத்​திட்டபகு​தி நேர தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு மாத தொகுப்​பூ​தி​யத்தை ரூ.1,500-ல் இருந்து ரூ.7,376 ஆக உயர்த்​தி, அதற்​கான ஆணை​களை சுகா​தா​ரத்துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று சென்னையில் வழங்​கி​னார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் தூய்​மைப் பணி​யாளர்கள் கடந்த 2002-ம் ஆண்டு பணி நியமனம் செய்​யப்​பட்டனர். இவர்​களுக்கு மாத ஊதி​யம் ரூ.500 என்று இருந்​தது. 4 ஆண்​டு​கள்தொடர்ச்​சி​யாக பணி​யாற்​றிய​வர்​களுக்கு மாதம் ரூ.1,000 என்று உயர்த்​தப்​பட்​டது.

7 ஆண்​டு​களுக்கு மேல் பணி​யாற்​றிய​வர்களுக்கு ரூ.1,500 என்று உயர்த்தி வழங்​கப்​பட்டு வரு​கிறது. கரோனா காலங்​களில் 938 பேர் தற்​காலிக பல்​நோக்கு மருத்​துவ பணி​யாளர்​களாக பணி​யமர்த்​தப்​பட்​டு அந்​தந்த மாவட்ட நலவாழ்வு சங்​கம் மூல​மாக ரூ.27,000 வரை ஊதி​யம் வழங்​கப்​படு​கிறது.

மீத​முள்ள 1,575 பேருக்கு தற்​போது ஊதி​யம் உயர்த்தி வழங்​கும் ஆணை​கள் வழங்​கப்பட்​டுள்​ளன. மாவட்​டங்களில் பணி​யிடங்​கள் காலி​யாகும் போது, அவர்களின் கல்​வித் தகு​திப்படி மாவட்ட நலவாழ்வு சங்​கம் மூலம் தேர்ந்​தெடுத்து பல்நோக்கு மருத்துவ பணியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்​.

SCROLL FOR NEXT