சென்னையில் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள போலீஸார், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

 
தமிழகம்

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

பாதுகாப்புப் பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படைகள்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது. நாளை காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவ படைகள் குவிக்​கப்​பட்​டுள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இந்​தத் தேர்​தலில் மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். வாக்​குப் பதிவு நாளை நடை​பெறும் நிலை​யில், நேற்று மாலை 6 மணி​யுடன் பிரச்​சா​ரம் ஓய்ந்​தது. சென்னை கொளத்​தூரில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், சேலம் எடப்​பாடி​யில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, சென்னை நந்​தனத்​தில் தவெக தலை​வர் விஜய், ஸ்ரீபெரும்​புதூரில் தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, சென்னை மயி​லாப்​பூரில் தமிழிசை சவுந்​தர​ராஜன், சாத்​தூரில் நயி​னார் நாகேந்​திரன், தரு​மபுரி​யில் பாமக தலை​வர் அன்​புமணி, சென்னை எழும்​பூரில் சசிகலா, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், காரைக்​குடி​யில் நாதக மாநில ஒருங்​கிணைப்​பாளர் சீமான், சென்​னை​யில் ஜி.கே.​வாசன் ஆகியோர் தங்​கள் இறு​திக்​கட்ட பிரச்​சா​ரத்தை நிறைவு செய்​தனர்.

தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைந்த நிலை​யில், அந்த நேரத்​தில் இருந்து நாளை வாக்​குப்​ப​திவு நிறைவடை​யும் மாலை 6 மணி வரையி​லான 48 மணி நேரத்தை அமைதி கால​மாக தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. இந்த அமைதி காலத்​தில் தேர்​தல் தொடர்​பான எந்​தப் பொதுக் கூட்​டத்​தையோ, ஊர்​வலத்​தையோ நடத்​த கூடாது. எந்​தத் தேர்​தல் விவ​காரத்​தை​யும், திரைப்​படம், தொலைக்​காட்​சி, எப்​எம் ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், டிவிட்​டர் போன்ற அல்​லது இது​போன்ற சாதனம் வாயி​லாகப் பொது மக்​களின் பார்​வைக்கு வைக்​கக் கூடாது.

தொகு​திக்கு வெளியே இருந்து அழைத்து வரப்​பட்ட அனைத்து அரசி​யல் கட்சி நிர்​வாகி​கள், கட்​சிப் பணி​யாளர்​கள் மற்​றும் அத்​தொகு​தி​யின் வாக்​காளர்​ அல்​லாதோர், அத்​தொகு​தியை விட்டு வெளி​யேற வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழகம் முழுதும் திருமண மண்​டபங்​கள், தங்​கும் விடு​தி​களில் நேற்று மாலை முதலே போலீ​ஸார் தீவிர சோதனை நடத்​தி,தொகு​திக்கு தொடர்பு இல்​லாதவர்​களை வெளி​யேற்​றும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இந்த 48 மணி நேர அமைதி காலத்தை மது​விலக்கு நாளாக தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. அதனால் நேற்று முதல் நாளை நள்​ளிரவு 12 மணி வரை மதுக்​கடைகள், மதுக்​கூடங்​களை மூட தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்த தேர்​தலில் 5.73 கோடி பேர் வாக்​களிக்க உள்​ளனர். இதற்​காக 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அங்கு அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

தேர்​தல் பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர். மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத பணி​யாளர்​களும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். வாக்​குச் சாவடி பணி​யில் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​படு​கின்​றனர்.

தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்த மார்ச் 15-ம் தேதி​யில் இருந்​து, தலா 2,106 பறக்​கும் படைகள், நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் நடத்​திய சோதனை​யில் நேற்று வரை சுமார் ரூ.1,200 கோடிக்கு மேல் ரொக்​கம், மது​பானங்​கள், தங்​கம், வெள்ளி பொருட்​கள் மற்​றும் வாக்​காளர்​களுக்கு வழங்​கு​வதற்​காக கொண்டு செல்​லப்​பட்ட இலவசப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இத்​தேர்​தலில் 234 தொகு​தி​களுக்​கும் 136 பொது பார்​வை​யாளர்​கள், 50 காவல் பார்​வை​யாளர்​கள் மற்​றும் 150 செல​வின பார்​வை​யாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களும் தொடர் கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இன்று காலை 10 மணி முதல் இறு​தி​கட்ட பயிற்​சி​யும், வாக்​குப் பதிவு இயந்​திரங்​களைப் பலத்த பாது​காப்​புடன் அனைத்து வாக்​குச் சாவடிகளுக்​கும் அனுப்​பும் பணி தொடங்​கு​கிறது. வாக்​குப் பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடை​பெறுகிறது.

12 ஆவணங்​கள்: வாக்​காளர் அட்டை இல்​லா​விட்​டால் ஆதார் உள்​ளிட்ட 12 ஆவணங்​களைக் காட்டி வாக்​களிக்​கலாம் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. அதன்​படி, ஆதார் அட்​டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தி​யளிப்​புத் திட்​டப் பணி அடை​யாள அட்​டை, புகைப்​படத்​துடன் கூடிய வங்கி அல்​லது அஞ்​சல​கக் கணக்​குப் புத்​தகங்​கள், ஓட்​டுநர் உரிமம், வரு​மான வரி நிரந்தர கணக்கு எண் அட்​டை, இந்​தி​யக் கடவுச்​சீட்​டு, புகைப்​படத்​துடன் கூடிய ஓய்​வூ​திய ஆவணம், மத்​திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறு​வனங்​கள், வரையறுக்​கப்​பட்ட பொது நிறு​வனங்​களின் தொழிலா​ளர்​களுக்கு வழங்​கப்​பட்ட புகைப்​படத்​துடன் கூடிய பணி அடை​யாள அட்​டைகள், நாடாளு​மன்ற, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள அடை​யாள அட்​டை, இந்​திய அரசின் சமூக நீதி மற்​றும் அதி​காரமளித்​தல் அமைச்​சகத்​தால் வழங்​கப்​பட்ட இயலாமைக்​கான தனித்​து​வ​மான அடை​யாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை காண்​பித்து வாக்​களிக்​கலாம்.

வாக்கு எண்​ணிக்கை: வாக்​குப் பதிவு நிறைவடைந்த பின், அனைத்து வாக்​குப் பதிவு இயந்​திரங்​களும், பாது​காப்​பாக வாக்கு எண்​ணும் மையங்​களுக்கு கொண்டு செல்​லப்பட உள்​ளன. மேற்கு வங்​கத்​தில் நாளை முதல் கட்​டத் தேர்​தல் நடை​பெறுகிறது.

இரண்​டாவது மற்​றும் கடைசிக் கட்​டத் தேர்​தல் ஏப்​.29-ம் தேதி நடை​பெறுகிறது. அதன்​பின், மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை நடை​பெறுகிறது. அப்​போது, தமிழ்​நாடு, புதுச்​சேரி, கேரளா, அசாம்​, மேற்​கு வங்​கம்​ ஆகிய 5 மாநிலங்​களுக்​கும்​ சேர்த்​து ​வாக்​கு எண்​ணிக்​கை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT