அர்ச்சனா பட்நாயக்
சென்னை: தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்காக ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வாக்காளர் எண்ணிக்கை 5.73 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் மற்றும் மனுக்கள் பரிசீலனை முடிந்துள்ள நிலையில், நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர், கழிப்பறை மற்றும் சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 3,022 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமானவை பட்டியலில் உள்ளன. கடந்த தேர்தல்களை விட தற்போது எண்ணிக்கை குறைந்துள்ளதுடன் இடங்களும் மாறி உள்ளன.
கடைசியாக கண்டறியப்படும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் எண்ணிக்கையில் துணை ராணுவப் படையினர் நியமிக்கப்படுவார்கள். தவிர நுண் பார்வையாளர்கள், வெப் கேம், வீடியோ பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தால் அங்கு துணை ராணுவப் படையினர் அதிகளவில் நிறுத்தப்படுவார்கள். தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட துணை ராணுவப் படையினர் ஏப்.13-ம் தேதிக்குள் வந்துவிடுவார்கள்.
ஒரே மாதிரியான பிரச்சார அனுமதி: வேட்பாளர்கள், தலைவர்களுக்கான பிரச்சார அனுமதியை விதிமுறைகளின்படி ஒரேமாதிரியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 85 வயதை கடந்த 2.50 லட்சம் பேர் வீட்டில் இருந்தே தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது வெப்பம் அதிகளவில் உள்ளதால், வாக்குச்சாவடிகளில் போதிய நிழல் இல்லாத பகுதிகளில் வரிசையில் நிற்பவர்கள் அனைவருக்கும் நிழல் தரும் வகையில் ‘ஷாமியானா’ பந்தல் அமைக்கவும், இருக்கைகள் போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் போதிய வசதி செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு, விவிபாட் இயந்திரங்கள் 120 சதவீதத்தைத் தாண்டியும் இருப்பு உள்ளது. இந்தத் தேர்தலுக்கு ரூ.1,302 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது ரூ.1,009 கோடி, முந்தைய 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ரூ.795 கோடி செலவானது.
‘சி விஜில்’ செயலியில் புகார்: ‘சி விஜில்’ செயலி மூலம் பெறப்படும் புகார்களுக்கு, 100 நிமிடங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுவரை இந்தச் செயலியில் 2,364 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதே போல், தொலைபேசி வாயிலாக 43,220 புகார்கள் வந்துள்ளன. இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்களின் நடவடிக்கை அடிப்படையில், ரூ.92.07 கோடி ரொக்கம், ரூ.2.04 கோடி மதுபானம், ரூ.75.76 கோடிக்கான போதைப் பொருட்கள், ரூ.214.38 கோடிக்கான தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள், ரூ.78.49 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் என ரூ.462.74 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதில், ரூ.278 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருட்கள் உரிய ஆவணங்கள் அளிக்கப்பட்டதால் திரும்ப கொடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள ரொக்கம் உள்ளிட்டவை வருமான வரித் துறை, அமலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
18 முதல் 19 வயது வரை: தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் முடிந்து கடந்த பிப்.23-ம் தேதி இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியானது. அப்பட்டியலின்படி, 2,77,38,925 ஆண், 2,89,60,838 பெண், 7,617 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம். மாற்றுத்திறனாளிகள் என குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 8.99 லட்சமாக உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் விடுபட்டவர்கள், பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு மனுக்கள் பெறப்பட்டன. வழக்கமாக, வேட்பு மனுத் தாக்கல் முடியும் நாளில் கூடுதல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் வாக்காளர் பட்டியலைத் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று இணையதளத்தில் வெளியிட்டார்.
5,73,43,291 வாக்காளர்கள்: அதன்படி, தமிழகம் முழுவதும் 2 கோடியே 80 லட்சத்து 30,658 ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4,905 பெண்கள், 7,728 3-ம் பாலினத்தவர் என 5 கோடியே 73 லட்சத்து 43,291 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி, பிப்.23-ம் தேதி வெளியான இறுதி வாக்காளர் பட்டியலை விட 6 லட்சத்து 35,911 வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அத்துடன் 19-20 வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 59,039 ஆகவும், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 10 லட்சத்து 62,752 ஆகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.