மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இயக்கப்படும் ‘விஸ்டாடோம்’ பெட்டி இணைக்கப்பட்ட ரயில். (கோப்பு படம்)
சென்னை: தெற்கு ரயில்வேயில் முதல்முறையாக கண்ணாடிக் கூரை கொண்ட ‘விஸ்டாடோம்’ பெட்டி அக்.22 முதல் மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் இணைத்து இயக்கப்பட உள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, கடந்த 2017-ம் ஆண்டு முதல் எல்எச்பி, ‘விஸ்டாடோம்’ சுற்றுலா ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் முதல்முறையாக, மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் அக்.22-ம் தேதி முதல் ஜன.15-ம் தேதி வரை கண்ணாடிக் கூரை கொண்ட ‘விஸ்டாடோம்’ பெட்டி பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில் வே அதிகாரிகள் கூறியதாவது: அழகிய மலைப் பகுதிகள், அருவிகள் போன்ற இயற்கை அழகுகளை பயணிகள் முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில் விஸ்டாடோம் பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டியில் பெரிய கண்ணாடி ஜன்னல்களோடு, சுழலும் இருக்கைகள் இருப்பதால் 360 டிகிரி கோணத்தில் இயற்கையை ரசிக்க முடியும். ஒரு பெட்டியில் 44 இருக்கைகள் மட்டுமே இருக்கும். வைஃபை, ஜிபிஎஸ், உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் இதில் உண்டு. ரூ.4 கோடி செலவில் இப்பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் முதல்முறையாக, மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் (16327) அக்.22-ம் தேதி முதல் விஸ்டாடோம் பெட்டி, பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது. இது ஜன.15-ம் தேதி வரை 4 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படும். வாரத்தில் 4 நாட்கள் (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) இப்பெட்டி இணைத்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் (குருவாயூர் - மதுரை) அக்.23-ம் தேதி முதல் ஜன. 16-ம் தேதி வரை அமலில் இருக்கும். இதுவாரத்தில் 4 நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்) பெட்டி இணைத்து இயக்கப்படும்.
தமிழகம் - கேரளா எல்லையான செங்கோட்டை - புனலூர் மலைப்பாதை, ஆரியங்காவு கணவாய் வழியாகச் செல்லும்போது, மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய இயற்கைக் காட்சிகளை ரசிக்கலாம். இந்த பெட்டியில் அடிப்படைக் கட்டணம் ரூ.515-ல் இருந்து தொடங்குகிறது. மதுரையில் இருந்து குருவாயூர் வரை முழுமையாகப் பயணிப்பதற்கான மொத்தக் கட்டணம் ரூ.1,875 ஆகும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.