தமிழகம்

பெங்களூருவில் மிலாது நபி ஊர்வலத்தின்போது வன்முறை: 6 பேர் கைது

இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூருவில் மிலாது நபி ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் 6 பேரை கைது செய்தனர்.

பெங்களூருவில் உள்ள பசவனகுடியில் நேற்று முன்தினம் மாலை முஸ்லிம் அமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோர் மிலாது நபி தினத்தை முன்னிட்டு ஊர்வலமாக சென்றனர். அப்போது முஸ்லிம் அமைப்பினர் உருது மொழியில் முழக்கம் எழுப்பியவாறு கே.ஆர்.சதுக்கம் அருகே சென்றனர்.

அங்கு ஹனுமன் சேனா அமைப்பின் நிர்வாகி புனீத் கெரேஹள்ளி தலைமையில் குவிந்திருந்த இந்துத்துவ அமைப்பினர் 'ஜெய் ஸ்ரீராம்' என பதில் முழக்கம் எழுப்பினர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் முஸ்லிம் அமைப்பினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் முரளி (23), கார்த்திக் கவுடா (32), மஞ்சுநாத் (24) ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இந்துத்துவ அமைப்பினர் முஸ்லிம்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பசவன்குடி போலீஸார், இரு தரப்பினர் மீதும் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் வந்தனர். பெங்களூரு தெற்கு மண்டல துணை காவல் ஆணையர் வம்சி கிருஷ்ணா, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு மோதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து பசவன்குடி போலீஸார் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இரு பிரிவினர் மீதும் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள், நேரடி சாட்சியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஹனுமன் சேனாவை சேர்ந்த புனீத் கெரேஹள்ளி (29), வினோத் நாயக் (24), கோபி கவுடா (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். முஸ்லீம் அமைப்பை சேர்ந்த அக்மல் பஷீர் (18), அபுபக்கர் சித்திக் (24), சையத் அனாஸ் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மொத்தமாக 6 பேரையும் நேற்று பெங்களூரு மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தப்படுத்தினர். பின்னர் நீதிமன்ற காவலில் செல்ல உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து 6 பேரும் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட‌னர்.

SCROLL FOR NEXT