சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 350 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி - தாய், மகள் கைது

 பிரமீளா | ஜெனிபர்

பிரமீளா | ஜெனிபர்

Updated on
1 min read

சென்னை: தீபாவளி சீட்டு நடத்தி 350 பேரிடம் ரூ.40 லட்சம் பணம் வசூலித்து மோசடி செய்து தலைமறைவாக இருந்த தாய், மகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கொரட்டூரை சேர்ந்த மோனிஷா (32) என்பவர் கடந்த ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், “எனது தோழியான அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஜெனிபர் (30) மற்றும் அவரது தாயார் பிரமீளா (57) ஆகியோர் தீபாவளி பண்டு சீட்டு நடத்துவதாகவும், மாதம் ரூ.1,000 வீதம் 12 மாதங்கள் செலுத்தினால் ரூ.17 ஆயிரம் வழங்குவதுடன், பேன்சி சேலை, பாஸ்மதி அரிசி, இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறினர்.

அதனை நம்பி நான் உள்பட 350 பேர் பண்டில் சேர்ந்தோம். 12 மாதங்கள் முடிந்த பின்னர் பணத்தையும், பொருட்களையும் வழங்காமல் ஜெனிபரும், பிரமீளாவும் தலைமறைவாகி விட்டனர். எங்களிடம் மோசடி செய்யப்பட்ட சுமார் ரூ.40 லட்சம் பணத்தை மீட்டு, பண மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் இருவரையும் கைது செய்ய வேண்டும்” என புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், புகாரில் தெரிவிக்கப்பட்டபடி பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜெனிபர் மற்றும் அவரது தாயார் பிரமீளாவை போலீஸார் கைது செய்தனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொதுமக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை:

“பண்டிகை காலங்களில் அதிக லாபம் தருவதாக கூறி நடத்தப்படும் பதிவு செய்யப்படாத பண்டு அல்லது சீட்டு திட்டங்களில் பணம் செலுத்தி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் திட்டத்தின் நம்பகத்தன்மையை முழுமையாக விசாரித்து, வங்கி மற்றும் சட்டப்பூர்வமான நிதி நிறுவனங்கள் மூலம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்” என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

<div class="paragraphs"><p> பிரமீளா | ஜெனிபர் </p></div>
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த அவதூறு வழக்கு: மு.க.ஸ்டாலின், திமுக ஐடி விங் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in