பொன்முடி, கவுதமசிகாமணி
விழுப்புரம்: விதிகளை மீறி செம்மண் அள்ளியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி மீது தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏப்.2-ம் தேதி தீர்ப்பளிக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி 2 லட்சத்து 64,644 லோடு செம்மண்ணை கடத்தி, அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, அவர்களது ஆதரவாளர்கள் ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கின் மீதான விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன், உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். அரசு தரப்பில் 57 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 33 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.
அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்தாண்டு அக்டோபர் மாதம் நிறைவு பெற்றது. இந்நிலையில் செம்மண் குவாரி கொள்ளை வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி மணிமொழி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி வாதிட்டார். பொன்முடி, கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், கோதகுமார் ஆகியோர் ஆஜராகவில்லை. ராஜமகேந்திரன், சதானந்தம், கோபிநாத் ஆஜராயினர். இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அனைத்து நிலைகளிலும் விசாரணை நிறைவு பெற்றதால், செம்மண் கொள்ளை வழக்கு மீதான தீர்ப்பு வரும் ஏப்.2-ம் தேதி அளிக்கப்படும் என மாவட்ட நீதிபதி மணிமொழி தெரிவித்தார். மேலும் அவர், தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் ஆஜர்படுத்த குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.