செங்கல்பட்டு: செங்கல்பட்டு – அரக்கோணம் ரயில்வே தடத்தில் ஆத்தூர் கிராமம், வடபாதி பகுதியை இணைக்கும் முக்கிய ரயில்வே கேட்டை தெற்கு ரயில்வே நிர்வாகம் நள்ளிரவில் மூடி, சாலையை தோண்டியதால் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்து வசதி இன்றி தவிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செங்கல்பட்டு அருகே ஆத்தூர் – வடபாதி ரயில்வே கேட் வழியாக வடபாதி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தினசரி இவ்வழியாக சென்று வருகின்றனர். மேலும், சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய நிலங்களுக்கும் இந்த வழியே பிரதான அணுகுமுறையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அரக்கோணம் – செங்கல்பட்டு ரயில்வே பாதை மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக, தற்போதைய ரயில்வே கேட்டை மூடி, அதற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணிகள் நிறைவடையும் வரை அருகில் உள்ள மாற்று சுரங்கப்பாதையை மக்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் ரயில்வே கேட் மூடப்பட்டு, பொக்லைன் மூலம் சாலை தோண்டப்பட்டதால், அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்களை ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 11 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: “ரயில்வே கேட் அமைந்துள்ள இடத்தின் அருகே ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. அந்த பகுதியில் சிறிதளவு ஆழமாக தோண்டினாலே ஊற்று நீர் வெளிப்படும். எனவே அங்கு சுரங்கப்பாதை அமைத்தால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பயன்பாடற்றதாக மாறிவிடும்.
தற்போது மாற்று வழியாக பயன்படுத்துமாறு கூறப்படும் சுரங்கப்பாதையும் மிகவும் குறுகலாக உள்ளது. அதனால் விவசாய இடுபொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள், அறுவடை இயந்திரங்கள், வாகனங்கள் செல்ல முடியாது. மழைக்காலங்களில் அந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளது.
எனவே ரயில்வே கேட்டை மூடும் திட்டத்தை கைவிட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்டகால நலனை கருத்தில் கொண்டு சுரங்கப்பாதைக்கு பதிலாக மேம்பாலம் அமைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் காரணமாக ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் ரயில்வே நிர்வாகம் இடையே சுமூகத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.