கோவில்பட்டி: விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட எட்டயபுரம் அருகே குளத்துள்வாய்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி 4 கிராம மக்கள், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 45 வீடுகள் அமைந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதன் பின்னர் குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை உருவாகியது. அவர்களுக்கும் முகாமில் உள்ளவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களை கண்காணிக்க வேண்டும். இப்பகுதியில் போதை பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், குளத்துள்வாய்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கியிருந்த கோழிப்பண்ணை ஷெட்டை தங்களுக்கு விவசாய விளை பொருட்கள் காய வைக்கும் களமாக பயன்படுத்த வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்தவொரு தீர்வும் எட்டப்படாமல் அப்படியே உள்ளது. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ம் தேதி குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக் கொடிகளை ஏற்றி, சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து கடந்த 17-ம் தேதி கிராம மக்கள் சார்பில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் சரல் மண் கொட்டி சமன் செய்தனர். இதற்கு முகாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மறுநாள் 18-ம் தேதி கிராம மக்களுக்கும் முகாமை சேர்ந்தவருக்கும் இடையே பிரச்சினை உருவானது. போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் குளத்துள்வாய்ப்பட்டி கிராமத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை உடனடியாக இங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டி கிராம மக்கள் உறுதியாக இருந்தனர். இதனால் பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் போனது.
தொடர்ந்து கிராம மக்கள் இலங்கை தமிழர் முகாமை இடமாற்றம் செய்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிப்போம் இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என அறிவித்தனர். அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. குளத்துள்வாய்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தயாராக இருந்தனர். இந்த வாக்குச்சாவடியில் 453 ஆண்கள், 530 பெண்கள் என மொத்தம் 983 வாக்காளர்கள் உள்ளனர். இதில் காலை 9 மணி நிலவரப்படி 5 பேர் மட்டுமே வாக்களித்தனர். 11 மணி நிலவரப்படி 8 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட குளத்தூள்வாய் பட்டி, குமார கிரி, சோத்து நாயக்கன்பட்டி, அம்மா மடம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லாமல் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்தனர். வாக்காளர்கள் இல்லாமல் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியம் காரணமாகவே குளத்துள்வாய்ப்பட்டி கிராமத்தில் பிரச்சினை பெரிதாகிவிட்டது. இதற்கு ஒரே தீர்வு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது மட்டுமே, என கிராம மக்கள் தெரிவித்தனர்.