காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி
கரூர்: “இளைஞர்கள் ஆதரவு அதிகமாக இருக்கக் கூடிய தவெக தலைவர் விஜய் நிச்சயமாக 2-வது இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது” என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
கரூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இண்டியா கூட்டணியின் தமிழகத்துக்கான நட்சத்திர பேச்சாளராக இருந்தார். ஆளுநர் மாளிகையை, பாஜகவின் தலைமை அலுவலகமாக செயல்பட வைத்தார். அவரை மேற்கு வங்க ஆளுநராக மாற்றியதற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கவலைப்படத் தேவையில்லை. அங்கும் மம்தா பானர்ஜிக்கு நட்சத்திர பேச்சாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி இந்தத் தேர்தலில் 3-வது இடத்துக்குச் செல்லும். பிஹாரில் கூட்டணிக் கட்சியை பாஜக கபளீகரம் செய்து பதவிக்கு வருகிறது. அதேபோல தமிழகத்திலும் அதிமுக என்ற கட்சிக்கு கடைசித் தேர்தலாக இது இருக்கும். அதேவேளையில், இளைஞர்கள் ஆதரவு அதிகமாக இருக்கக் கூடிய தவெக தலைவர் விஜய் நிச்சயமாக 2-வது இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது” என்றார்.