தவெக தலைவர் விஜய், சென்னையில் வரும் 16-ம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து தவெக வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத்தேர்தலில், நடிகர் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், வரும் 16-ம்தேதி சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய்மிக முக்கியமான ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்தில் இந்தக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அன்று காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்குச்சாவடி முகவர்களின் பணிகள் மற்றும் களப்பணிகள் குறித்து இறுதிக்கட்ட ஆலோசனைகளையும், தேர்தல் வியூகங்களையும் விஜய் இந்த சந்திப்பில் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.