தமிழகம்

“திமுக ஆட்சி நிலைக்கக் கூடாது என்பது தான் மக்களின் கனவு” - விஜய் ஆவேசம்

செய்திப்பிரிவு

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து, உங்கள் கனவைச் சொல்லுங்கள் என மக்களிடம் கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின். மக்களுக்கு நீங்கள் கொடுத்த கனவு என்னவென்றால் பாதுகாப்பு இல்லாத மக்கள் விரோத ஆட்சி தான். திமுக ஆட்சி நிலைக்கக் கூடாது என்பது தான் மக்களின் கனவு” என தவெக தலைவர் விஜய் பேசினார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் தாளமுத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றநிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.

          

கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது: நம்மை குறைத்து மதிப்பீடு செய்து கேலி, கிண்டல் செய்பவர்களை, அதே விஷயத்தை துணிச்சலுடன், நேர்மறையான புள்ளியில் இருந்து ஆரம்பிப்போம். விஜய் பனையூரை விட்டு வெளியே வரமாட்டாரா என கேள்வி எழுப்புபவர்களுக்கு, தமிழகம் தான் எனது வீடு, 8 கோடி மக்கள் தான் எனது குடும்பம் என்பதை கூறிக்கொள்கிறேன்.

உங்கள் விஜய் ஓட்டுக் கேட்டு வரவில்லை; நீதி கேட்டு வந்துள்ளேன். உங்களுக்கு நீதி கேட்பதற்காக அரசியலுக்கு வந்த நான், இப்போது, நீதிக்காக உங்களைத் தேடி வந்துள்ளேன்.

செல்ஃப் எடுக்காத கூட்டணி பேச்சுவார்த்தை திமுக-வில் நடந்து வருகிறது. ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஏமாற்றும் அரசியல் ஒழிய வேண்டும். விஜய் வந்த பின் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேலை ஆகாது. ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் சந்தோசமாக வாங்கிக் கொண்டு, பணம் கொடுப்பவர்களின் காதில் விசில் ஊதி அனுப்புங்கள். உங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க வையுங்கள்.

எந்தக் கட்சியையும் ஒழிக்கவோ, அழிக்கவோ நான் அரசியலுக்கு வரவில்லை. வெறுப்பு அரசியல் செய்யவரவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியல் அனுபவம் பற்றி பேசுகிறார்கள். மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தவிர, அவர்களின் அரசியல் அனுபவம் வேறு எதுவாக இருக்கும்.

சொந்தமாக கட்சி ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் ஓட்டு வங்கி வைத்துள்ளோம். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் ஆரம்பித்த கட்சியில் இருந்து ஆட்சி அதிகாரத்தை பிடித்தவர்கள், என்னைப் போல சுயமாக கட்சியை ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு சதவீதம் ஓட்டு பெற முடியுமா?

75 ஆண்டு, 50 ஆண்டு கட்சிகளை மீறி தன்னந்தனியாக களத்தில் நின்று மக்கள் ஆதரவு பெற்ற எங்களுக்கு அனுபவம் இல்லையா? ஆம், எங்களுக்கு கொள்ளையடிப்பதில் அனுபவமில்லை. அது சுட்டுப் போட்டாலும் வராது. நல்லாட்சி புரிய படித்த மேதாவியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மக்களுக்கு தூய ஆட்சியை தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து, உங்கள் கனவைச் சொல்லுங்கள் என மக்களிடம் கேட்கிறார். மக்களுக்கு நீங்கள் கொடுத்த கனவு என்னவென்றால் பாதுகாப்பு இல்லாத மக்கள் விரோத ஆட்சி தான். திமுக ஆட்சி நிலைக்கக் கூடாது என்பது தான் மக்களின் கனவு. தூய ஆட்சி

தவெக வழங்கும் என்பது தான் மக்களின் கனவு. டில்லி அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். பெண்களுக்கான பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆஃப் கன்ட்ரோல். மொத்தத்தில் திமுக ஆட்சியே அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்.

ஆட்சியை விட்டுப் போகும் போது கூட முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றியதாக கூறியவர், பின்னர், 90 சதவீதம் நிறைவேற்றியதாகக் கூறினார். சமீபத்தில் 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதியை நிறைவேற்றி 80 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறுகிறார். வரும் நாட்களில் 50 சதவீதம், 40 சதவீதம், 30 சதவீதம் என முதல்வர் ஸ்டாலின் கூறுவார்.

டிஜிபி இல்லாத தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எப்படி சரியாக இருக்கும்? மக்களின் அடிப்படை தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றுவதே தவெக-வின் முதல் கடமை. என்னை நம்பும் உங்களை கைவிட மாட்டேன். இறுதிவரை உங்களுக்காகப் போராடுவேன். தவெக - திமுக கட்சிகளுக்கு இடையேதான் போட்டி. ஏற்கெனவே மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் எங்களின் குறி.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என விக்கிரவாண்டியில் நான் வீசிய குண்டு, தற்போது, தமிழக அரசியல் கட்சிகளுக்கு இடையே வெடித்துக் கொண்டு இருக்கிறது. தேர்தலுக்கு மட்டும் தான் முதல்வர் ஸ்டாலின் கூட்டணி வைப்பார். அதன் பின் வருமானத்தில் தனி ஆவர்த்தனம் புரிவார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது முடியாத காரியம் என்பார். வரப்போகும் நமது ஆட்சியில் சமூகநீதியை நிலைநாட்டி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT