திருநெல்வேலி: “பல கோடிகளை கொடுத்து காங்கிரஸை தங்கள் பையில் போட்டுக் கொண்டனர். ஆனால், உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் உள்ளனர்” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசினார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்ற தவெக பிரச்சார பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியது:
“திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது முட்டுக்கட்டை போட்டு நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்திருப்பார்கள். தற்போது அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இதனால், இங்கு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த முடிந்துள்ளது.
திமுக அரசு நமக்கு எதிராக பிரச்சினைகள், அவதூறுகள் பரப்பினார்கள். திமுக, பாஜக கூட்டணி வெளியே தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் இரண்டு பேரும் ஒன்றுதான். இருவரின் நோக்கமும் ஒன்றுதான். விஜய் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கமே. நான் வந்ததால் ஊழல் செய்ய முடியாதபடி செய்துவிடுவேன் என்பதால் என் மீது அவர்களுக்கு கடும் ஆத்திரம்.
அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை மக்கள் உருவாக்கிவிட்டனர். அவர்களின் கூட்டணி கணக்கு எடுபடவில்லை. அவர்களின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. அதை ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறார். கூட்டணி கட்சியினரே ஒருவருக்கு ஒருவர் ஓட்டு போட மாட்டர்கள் போலிருக்கிறது. திமுகவின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம் மீது கடும் ஆத்திரம். அவர்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம். அதனால் இன்னும் ஆத்திரம்.
சில பல கோடிகளை கொடுத்து தனது பையில் காங்கிரஸை திமுக போட்டுக் கொண்டது. ஆனால், உண்மையான காங்கிரஸார் நம்மிடம் உள்ளனர். அவர்களது சிறுபான்மை பாசம் என்ற சாயம் வெளுத்துப் போய்விட்டது.
நான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் போனதற்குப் பின்னரே கட்சியை ஆரம்பித்துள்ளேன். இது அரசியலை தாண்டிய உறவு. அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு இது புரியாது. மற்றவர்களுக்கு இது எலெக்ஷன். எனக்கு ஒரு எமோஷன். எனக்கு ஒன்று என்றாலும், மக்களுக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கும், எனக்கும் கண் கலங்கும்.
கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். இதனால், ஜனநாயகன் படத்தை முடக்கினர். அதை யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்கு தெரயும். அதுவும் எடுபடவில்லை.
நான் வெளியே வரக் கூடாது என்று கண்டிஷன் போட்டனர். அதுவும் எடுபடவில்லை. பின்னர் நம்மை சுற்றியிருக்கிறவர்களை வைத்து அவதூறு பரப்பினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
எத்தனை சோதனைகள், வேதனைகளை கடந்து வந்துள்ளேன். திமுக, பாஜவினரால் என்னை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது. ஒவ்வொரு வீட்டியிலும் விஜய்யும், விஜியும் இருக்கும் வரைக்கும் என்னை மக்கள் மத்தியிலிருந்து பிரிக்க முடியாது.
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் விஜய்தான் நிற்கிறேன். வேட்பாளர்தான் விஜய், விஜய்தான் வேட்பாளர். இத்தனை ஆண்டுகளாக யார் யாருக்கெல்லாம் ஓட்டு போட்டீர்கள். இந்த முறை உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு ஓட்டுப் போடுங்கள். அந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவது நமக்கு நாமே ஓட்டு போடுவது மாதிரி. அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் நீங்கள் வெற்றிபெற்றது போன்றதாகும்.
இந்த தேர்தல் 50 ஆண்டு நடக்கும் அதிசய தேர்தல். உங்களுக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சி., அழகுமுத்துகோன், கட்டபொம்மன், குரூஸ் பர்னாந்து போன்ற தலைவர்கள் மாதிரி தவெக உழைக்கும்.
தவெக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், உழைப்பாளிகள் எல்லாரும் நன்றாக இருப்பார்கள். நமது சந்ததிகள் நன்றாக இருக்கும். எனவே வேறு யாருக்கும் ஓட்டு போட்டு ஓட்டை வீணாக்கிவிடாதீர்கள்.
மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொடமாட்டேன். தற்போது ஆளுகிறவர்களும், இதற்குமுன் ஆண்டவர்களும் இதை சொல்ல முடியுமா? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருக்குமா? பெண்களுக்கு பாதுப்பு கிடைக்காமல் இருந்திருக்குமா? இதற்கெல்லாம் பதில் சொல்ல தகுதி இருக்கிறதா?
இரண்டரை வயது குழந்தையை திமுகவை சேர்ந்தவர் கொலை செய்தார். விளாத்திகுளம் பகுதியில் பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்டதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
போலீஸாரை பொம்மையாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்குநேரி சம்பவத்தை ஏன் தடுக்கவில்லை? சட்டவிரோதமாக மணலை, கனிம வளங்களை திருடுகிறார்கள். குடும்பமாக கொள்ளை அடிக்கிறார்கள். ஆட்சி முழுக்க ஊழல் என்று நாறிக் கிடக்கிறது. இந்நிலையில் எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்பீர்கள்?
உங்கள் பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. இது மாற்றத்துக்கான தேர்தல், மாற்றத்தை கொண்டுவரப்போகும் தேர்தல். இதை உங்களாலேயோ மற்றும் பலராலேயோ தடுக்க முடியாது.
வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு, அத்தனை வலிகளையும் தாங்கி வந்துளளேன். தமிழகத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி. இது விசில் புரட்சி தேர்தலாக இருக்கும்” என்று விஜய் பேசினார். ‘நான் தன்னந்தனி ஆளு’ என்ற கட்சியின் தேர்தல் பரப்புரை பாடலை பாடி முடித்தார் விஜய்.