“விஜய்க்கு கூடும் கூட்டத்தை, இது சினிமா பார்த்துவிட்டு விசில் அடிக்கும் கூட்டம் என்று நினைத்தால் எம்ஜிஆரை பார்த்து ஏமாந்து போனது போல் ஏமாந்து விடுவீர்கள்” என்று முன்பு சொல்லி இருந்த காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், தனது கட்சியை தமாகா-வில் இணைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
உங்கள் கட்சியை தமாகா-வில் இணைக்கப் போவதாக தகவல் வருகிறதே..?
ஆம். டிச.20-ம் தேதி தமாகா-வில் காமராஜர் மக்கள் கட்சியை இணைப்பதாக பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
அரசியல் நடத்த வேண்டுமெனில் பணமே பிரதானம். அது என்னிடம் இல்லை. எனது கட்சியை வழி நடத்த மாதம் ரூ.60 ஆயிரம் தேவைப்படுகிறது. நல்ல நண்பர்கள், கட்சி ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் மாதம் ஆயிரம் ரூபாய் என 60 பேர் வரை பணம் வழங்கி கட்சியை நடத்த உதவி வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் நிதி பெற மனமில்லாததால், தொண்டர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமாகா-வுடன் கட்சியை இணைக்க முடிவெடுத்துள்ளேன்.
எத்தனையோ கட்சிகள் இருக்கையில் தமாகா ஏன்?
ஊழலற்ற காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் 55 ஆண்டாக அரசியலில் பயணித்து வரும் என்னால், நிதி ஆதாரத்தை மாற்றுவழியில் பெற மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே, கடந்த 10 ஆண்டாக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று ஊழல் கறைபடியாத கரங்களை கொண்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசனிடம், எனது கட்சியை ஒப்படைத்துவிட்டு, நான் அரசியலில் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.
பல்வேறு கட்சிகளில் பயணித்து தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறி தனி கட்சியையும் நடத்த முடியாத நிலையில் அரசியல் துறவறம் மேற்கொள்கிறீர்களா?
16 வயதில் காமராஜரை பார்த்து அரசியலுக்கு வந்தவன் நான். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் காமராஜரின் ஊழலற்ற ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு முயற்சி எடுத்தும் பலன் இல்லை. காமராஜரால் அரசியலுக்கு வந்த நான், அரசியல் மாற்றத்தை நம்பி கெட்டுப்போனேன். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அரசியல் கட்சியும், ஓட்டுக்குப் பணம் பெறும் வாக்காளர்களும் இருக்கும் வரை தமிழக அரசியலில் மாற்றத்துக்கான வாய்ப்பில்லை. இதனை நன்கு உணர்ந்து எனது அரசியல் பயணத்துக்கு விடை கொடுத்துள்ளேன்.
ஊழல் மலிந்திட காரணம், மக்களா... அரசியல்வாதிகளா?
தேர்தலில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டுக்கு ஆயிரம், 2 ஆயிரம் என வாரி வழங்குகின்றனர். அரசியலுக்கு வந்து கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு அள்ளிவிட்டு தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். இவ்வாறு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறும் கட்சிகள், ஆட்சியை பிடித்ததும் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து கொழுக்கின்றனர். இப்படி அரசியல் கட்சிகள் ஊழல்புரிவதற்கு ஒட்டு மொத்தக் காரணமே தேர்தல் ஆணையம் தான். ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுத்து நிறுத்தினாலே மக்களும் மாறுவார்கள்; அரசியல் கட்சி தலைவர்களும் மாற்றப்படுவார்கள். ஊழலற்ற ஆட்சி அமைய இதுதான் ஆரம்பப் புள்ளி.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்று சொல்லும் நீங்கள், பாஜக வருகையை ஆதரிக்கிறீர்களா..?
எந்தக் கட்சியையும், எந்த அரசியல் தலைவர்களையும் நான் நியாயப்படுத்திப் பேசவில்லை. எப்போது பணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அப்போதே கட்சிகளின் கொள்கைகள் காற்றில் பறந்துவிட்டன. பிஹாரில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக பாஜக கூட்டணி அரசு பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைத்து ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த தவறான முன் உதாரணம் நாடு முழுவதும் எதிரொலித்து ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கியுள்ளது. தமிழகத்தில் திமுக-வும் பிஹார் பாணியை பின்பற்றி பொங்கல் போனஸ் போர்வையில் வாக்குச் சேகரித்து ஆட்சியை தக்கவைக்க முயற்சிக்கும்.
ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் இதற்கெல்லாம் விடிவு காலம் பிறந்திருக்குமா?
தமிழக மக்களின் மனம் கவர்ந்த புரட்சி தலைவராக வலம் வந்து ஆட்சியை பிடித்த எம்ஜிஆர், இன்றளவும் தமிழக வரலாற்றில் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார். அதுபோல, தமிழக அரசியலில் ரஜினி பிரவேசிக்காதது வரலாற்றுப் பிழையாகவே உள்ளது. ஊழலற்ற உன்னதமான ஆட்சியை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர் தான் நடிகர் ரஜினிகாந்த். அவர் ஒரு முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தால் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல், ஆட்சி நிர்வாகத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட்டு மக்கள் மத்தியில் நல்ல அரசியல் தலைவர் என்ற பெயரை எடுத்திருப்பார். ஏனோ... அவருக்கான பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்.
வீடு, இருசக்கர வாகனம், கார் வைத்துக் கொள்ளுமளவுக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும் என்கிறாரே விஜய்..?
விஜய் தன்னலமற்ற மக்கள் சேவைக்காக கட்சி ஆரம்பித்தவர் அல்ல; தனலாபம் ஈட்ட வேண்டி கட்சியை ஆரம்பித்தவர். அதற்கு சான்றாக, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா வையும், அரசியலே தெரியாத புஸ்ஸி ஆனந்தையும் அருகில் வைத்துக்கொண்டு கட்சி நடத்துகிறார். பசித்தவனுக்கு ஒருவேளை சாப்பிட மீனைக் கொடுப்பதைக் காட்டிலும், தினமும் சாப்பிட்டு பசியாற ஏதுவாக மீன் தூண்டிலை கொடுக்க வேண்டும். விவசாயம், நீர் மேலாண்மை, பொருளாதார முன்னேற்றம் என ஆக்கபூர்வமான முன்னெடுப்பு திட்டங்களை அறிவிக்காமல், வீடு, வாகனம் என ஒப்பேறாத திட்டங்களை விளம்பரப்படுத்தி, அரசியல் நடத்துவதை என்னவென்று கூறுவது.
ஜி.கே.வாசன் உங்களுக்கு வாய்ப்பளித்தால் இந்தத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு செலவு செய்ய என்னிடம் நிதியில்லை. ஜி.கே.வாசன் எனக்கான ஒட்டுமொத்த செலவையும் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் தேர்தலில் போட்டியிடுவேன். நான் தேர்தலில் போட்டியிடும் தொகுதியில் நானும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன்; எனது சார்பில் வேறு யாரும் பணம் கொடுக்கவும் ஒப்புக் கொள்ளமாட்டேன். இதற்கு வாசன் சம்மதித்தால் போட்டியிடுவது குறித்து யோசிக்கலாம்.