“எங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க வைத்ததே திமுக தான்!” - பொன்.ராதாகிருஷ்ணன் நேர்காணல்

“எங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க வைத்ததே திமுக தான்!” - பொன்.ராதாகிருஷ்ணன் நேர்காணல்
Updated on
2 min read

தேர்தலுக்காக தமிழகத்தில் தங்கள் கூட்டணியை பாஜக தலைமை சிறுகச் சிறுக கட்டமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காகப் பேசினோம்.

Q

மெட்ரோ ரயில் விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினால் மக்கள் எதை நம்புவார்கள்?

A

மத்திய அரசுக்கு சென்னை மெட்ரோ திட்டத்தில் இருந்த அதே ஆர்வம் தான் இன்றைக்கு கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களிலும் இருக்கிறது.

திருவனந்தபுரத்துக்கும், நாகர்கோவிலுக்கும் கூட மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என நானும் விரும்புகிறேன். ஆனால், இதற்கெல்லாம் ஒத்துழைப்புத் தரவேண்டிய முழு பொறுப்பு மாநில அரசினுடையது தானே.

Q

பெண்களுக்கு ரூ.10,000 தந்ததால் தான் பிஹாரில் பாஜக கூட்டணி வென்றது என்ற விமர்சனம் குறித்து..?

A

அனைத்துக் கட்சிகளும் கடைசி நேரத்தில் தங்களின் வெற்றியை துரிதப்படுத்துவதற்காக எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். அப்படி நாம் முன்னமே திட்டமிட்டிருந்த வேலைகள், செயல்படுத்தப்படாமல் இருந்து அதை நடைமுறைப்படுத்துவதில் என்ன தவறு? திமுக அரசு எத்தனையோ திட்டங்களை கடைசி நேரத்தில் தானே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால், தேர்தலுக்காகத்தான் அதைச் செய்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

Q

கடந்த காலங்களில் பாஜக அணிக்கு போதிய ஆதரவைத் தராத தமிழக மக்கள், இம்முறை அந்த அணியை ஆதரிக்குமளவுக்கு என்ன அதிசயம் நடந்திருக்கிறது?

A

உலகளவில் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய பிரதமர் மோடியின் நுணுக்கமான அணுகுமுறையும் புத்திக்கூர்மையான செயல்பாடும் நமக்கும் கிடைக்க வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இதுதான் மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

Q

கொங்கு மண்டலத்தில் பாஜக அதீத கவனம் செலுத்துவது ஏன்?

A

1984 தேர்தலில் வெறும் 700 வாக்குகள் வித்தியாசத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அப்போது நாங்கள், இந்த மாவட்டத்தைப் போல ஒட்டுமொத்த தமிழகமும் பாஜக-வுக்கு ஆதரவான நிலையை எடுக்க வேண்டும் என விரும்பினோம்.

இப்போது, ஒவ்வொரு பகுதியாக அது நிறைவேறி வருகிறது. கொங்கு மண்டலம் மட்டுமல்ல... அனைத்து மண்டலங்களிலும் பாஜக-வுக்கான வாக்கு வங்கி உருவாக்கப்பட்டுவிட்டது.

Q

பாஜக-வுக்கும் திமுக-வுக்கும் இடையில் மறைமுக டீல் இருப்பதாக விஜய் சொல்லிக் கொண்டே இருக்கிறாரே..?

A

1999-ல் திமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தது. அப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான அரசு எப்படி செயல்பட்டது என விஜய்க்கு நன்றாகவே தெரியும். அப்போது ஏற்பட்ட உறவு, இப்போதும் தொடர்வதாக விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், திமுக-வை தமிழகத்தில் ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே சிந்தனையாக வைத்து பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே, விஜய் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Q

2026 சட்டப்பேரவை தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்குமோ?

A

அப்படி ஒரு சிந்தனை எனக்கு இல்லை. தேர்தல் நெருக்கத்தில் பலவிதமான மாற்றங்கள் வரும். தற்போது, என்டிஏ-வை விட்டு விலகுவதாகச் சொன்னவர்கள் எல்லாம் மீண்டும் என்டிஏ-வில் இணைய விரும்புவதாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

தேர்தல் நெருங்கி வர வர, திமுக அரசை மாற்ற வேண்டும் என்பதை தங்களின் கடமையாக யாரெல்லாம் உளப்பூர்வமாக நினைக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் என்டிஏ-வில் இணையக்கூடிய வாய்ப்புகள் வரும். எனவே, களம் இருமுனை போட்டியாக மாற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

Q

அதிமுக-விலிருந்து விலக்கப்பட்டவர்களை கூட்டணிக்குள் கொண்டுவர ஜி.கே.வாசனை பழனிசாமியிடம் பாஜக தூது அனுப்பியதாமே..?

A

ஜி.கே.வாசனின் விருப்பு வெறுப்பற்ற அரசியல், அவரது அணுகுமுறைகள், மற்றவர்களை மதிக்கும் தன்மை இவற்றையெல்லாம் வைத்து இந்தக் கருத்து வந்திருக்கலாம். இது ஜி.கே.வாசனுக்கு கிடைத்திருக்க கூடிய மிகப்பெரிய நற்பெயர். இதை அவருக்கான கவுரவமாகத்தான் நான் நினைக்கிறேன்.

Q

பிஹார் காற்று தமிழகத்திலும் வீசுவதாக பிரதமர் மோடி பேசியதன் அர்த்தம் என்ன?

A

டெல்லிக்கென்று தனியாக காலநிலை மாற்றம் எதுவும் இல்லை. இமயமலையில் ஏற்படும் மாற்றமும், அதனுடைய தாக்கமும் தான் டெல்லியை வந்து சேரும். அங்கு குளிர் காலம் ஆரம்பிக்கும் போது, டெல்லியிலும் குளிர் ஆரம்பித்துவிடும்.

இப்போது, பிஹாரில் வீசியிருக்கக் கூடிய காற்று, தமிழகத்தை மட்டுமல்ல, தென்னகத்தை நோக்கி வருகிறது. அவ்வாறு வரும்போது, நாம் வரவேற்றுத்தானே ஆக வேண்டும்.

அது கட்டாயம் வந்துதான் ஆகும்; யாராலும் தடுக்க முடியாது. தடுக்க வேண்டும் என நினைப்பவர்கள், போர்வையை எடுத்து மூடிக் கொள்ளுங்கள்.

Q

நாகர்கோவிலில் இம்முறை எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக நீங்கள் நிற்கப் போவதாக பேச்சு அடிபடுகிறதே..?

A

நான் யாருக்குமே போட்டி கிடையாது. கட்சி என்ன முடிவை எடுத்தாலும், அதற்கு கட்டுப்பட்டு நடந்து வருகிறேன். இனியும் நடப்பேன். அவ்வளவு தான்.

Q

திமுக அணியை தோற்கடிக்க உங்கள் கூட்டணிக்கு எது சவாலாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

A

மக்கள் ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சிவப்புக் கம்பளத்தை விரித்துவிட்டார்கள். இனி அதில் நடந்து செல்ல வேண்டியது மட்டுமே பாக்கி.

சிவப்புக் கம்பளத்தை விரித்தது மக்கள் என்றாலும், விரிக்க வைத்ததே திமுக தான். திமுக-வின் தவறான ஆட்சியின் காரணமாக, மக்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

“எங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க வைத்ததே திமுக தான்!” - பொன்.ராதாகிருஷ்ணன் நேர்காணல்
“பணத்தால் எதையும் சாதிக்க நினைக்கும் கார்ப்பரேட் திமுக!” - ‘ஃபார்வர்டு பிளாக்’ கதிரவன் நேர்காணல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in