தவெக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற விஜய். படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சியான நேயம் மக்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார்.
கொக்கு பார்க் சிக்னல் அருகே உள்ள தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக் கூட திடலில் திரண்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் பேசியதாவது: புதுச்சேரியில் காங்கிரஸ் 6 முறை ஆட்சியில் இருந்தது. இண்டியா கூட்டணியில் காங்கிரஸூம், திமுகவும் கூட்டணி என சொல்லிக் கொண்டு சில தொகுதிகளில் ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்து நிற்கிறார்கள்.
இன்னொரு கூட்டணியாக என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உள்ளது. அது சேர்ந்த கூட்டணி இல்லை, சேர்ந்து சேர முடியாமல் போன சோர்ந்து போன கூட்டணி. தமிழகத்தில் எப்படி 2 கட்சிகள் ரகசிய கூட்டணி வைத்துள்ளார்களோ, அதே ‘ஃபார்முலா’ தான் புதுச்சேரியிலும் நடக்கிறது.
புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கை எத்தனை வருடங்களாக கேட்கப்பட்டு வருகிறது. இந்த அந்தஸ்தை இதற்கு முன் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும் தரவில்லை; தற்போதுள்ள பாஜகவும் கொண்டு வரவில்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கலாம் என 20 ஆண்டுகளுக்கு முன்பே சுஷ்மா சுவராஜ் அறிக்கை தந்தும் கூட, தற்போதுள்ள மத்திய அரசு இதை கண்டு கொள்ளவே இல்லை. காங்கிரஸ் அரசோ, பாஜக அரசோ மனசாட்சி இருந்தால் கூறட்டும்.
மக்களே இந்த ஏமாற்று கூட்டணிகளுக்கும் பொருந்தா கூட்டணிகளுக்கும் ஓட்டுப் போட்டு ஏமாந்து விடாதீர்கள். சிறுபான்மை சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என வேஷம் போடும் கூட்டணியை நம்பாதீர்கள். சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டணியையும் நம்பாதீர்கள். இரண்டு பேருக்கும் ஓட்டுப் போடுவது வீணானது.
உங்களுக்கு நல்லாட்சி வேண்டும்; நம்பிக்கையான ஆட்சி வேண்டும். தீயசக்தி திமுக இருக்கிற ஓட்டை உடைச்சலான காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம். பாஜக இருக்கிற கூட்டணியும் வேண்டாம். மக்களோடு மக்களாக இருக்கிற தவெக மற்றும் அதன் கூட்டணியான நேயம் மக்கள் கழகத்தின் வேட்பாளர்களுக்கு, உங்கள் விஜய்க்கே வாக்களிப்பதாக நினைத்து வாக்களியுங்கள். உங்கள் தேவைகள் நிறைவேற தவெக துணை நிற்கும். எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்களுக்கு துணையாக இருப்பேன்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமையும். அதேபோல் புதுச்சேரியிலும் தவெக ஆட்சிதான் அமைய வேண்டும். ஒரு விரல் புரட்சியான விசில் புரட்சியை புதுச்சேரியிலும் உருவாக்குங்கள். தவெக ஆட்சிக்கு வந்தால், புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற சட்டப்படி 100 சதவீதம் முயற்சிப்போம். ஆட்சி அமைந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
மகப்பேறு உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். அனைத்து அரசு துறை காலி பணியிடங்களும் நிரப்பப்படும். 100 சதவீத பயிர் காப்பீடு வழங்கப்படும். மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.20 டீசல் மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். புதுச்சேரி மாநிலத்துக்கான தனி கலை, அறிவியல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். காரைக்கால், மாகே, ஏனாமில் 25 சதவீதவளர்ச்சி செலவினங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். இவ்வாறு விஜய் பேசினார். தொடர்ந்து விஜய் கடலூர் சாலையில் ப்ரவிடன்ஸ் மால் அருகே மற்றும் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார்.