சென்னை: தமிழகத்தில் துறைவாரியாக தேர்தல் வாக்குறுதிகளை உள்ளடக்கிய 436 திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தூய சக்தி அரசாக பணியாற்றுவதே நம் இலக்கு.
எனவே, அமைச்சர்கள் தாங்கள் மட்டுமின்றி தங்களின்கீழ் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களும் தவறு செய்யாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் ‘வெற்றித் தமிழகம்’ எனும் பெயரில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், பட்ஜெட் தாக்கல் செய்வது, அதில் இடம்பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள், ஆளுநர் உரை, தேர்தல் வாக்குறுதிகளில் உடனே நிறைவேற்றக்கூடிய அறிவிப்புகள், தொழில் முதலீடுகள், டாஸ்மாக் விவகாரம், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடுவது, வேலைவாய்ப்பு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார். ‘‘நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை தயாரிக்க, அவரவர் துறைசார்ந்த விவரங்களை ஆராய்ந்து தரவுகளை வழங்க வேண்டும்.
செலவினங்களைக் குறைத்து, வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். நாம் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை சென்று சேர்கிறதா என்பதை அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும்.
தூய சக்தி அரசாக பணியாற்றுவதே நம் இலக்கு. எனவே, அமைச்சர்கள் தாங்கள் மட்டுமின்றி தங்களின்கீழ் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களும் தவறு செய்யாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏதேனும் தவறுகள் தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் நடமாட்டம் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
பள்ளி மாணவர்கள்கூட குட்கா போதைப் பொருளை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதை முழுவதுமாக ஒழிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குட்கா உட்பட போதைப் பொருட்களை பதுக்கும், விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் மட்டும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 24 கடைகள் மூடப்பட்டு, விற்பனையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
லஞ்சம் இல்லாத நிர்வாகம், போதை இல்லாத தமிழகம், இளைஞர்கள் முன்னேற்றம், மகளிர் மேம்பாடு, விவசாயிகள், மீனவர்கள் வளர்ச்சி உட்பட துறை வாரியாக தேர்தல் வாக்குறுதிகளை உள்ளடக்கிய 436 திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு துறைக்கும் தொலைநோக்கு இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது. இந்த திட்டங்களைஆராய்ந்து, அதை செயல்படுத்தும் பணிகளில் அமைச்சர்கள் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.