தவெக சார்பில் 4-வது ஆண்டாக கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளி மாணவி ஹரிஷ்தாவுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
சென்னை: ‘தனித்தன்மையை வளர்த்துக் கொண்டு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுங்கள்’ என தவெகவின் 4-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை வழங்கினார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 4-வது ஆண்டாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், வெங்கட்ரமணன், ராஜ்மோகன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.
முதல் கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 186 மாணவர்களுக்கு தவெக தலைவரும், முதல்வருமான விஜய், கல்வி ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவப்படுத்தினார்.
மாணவிக்கு நெக்லஸ்
மாநில அளவில் 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற அரியலூரைச் சேர்ந்த மாணவி ரிக்ஷிதாவுக்கு முதல்வர் விஜய் ஊக்கத் தொகை மற்றும் தங்க நெக்லஸை பரிசாக வழங்கினார்.
அப்போது மாணவி கேட்டுக் கொண்டதன்பேரில், முதல்வரே அவருக்கு நெக்லஸை அணிவித்தார். தொடர்ந்து, திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி மாணவர் சோனேஷ், கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளி மாணவி ஹரிஷ்தா ஆகியோருக்கு முதல்வர் விஜய் சான்றிதழ் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது: நான் இங்கு முதல் அமைச்சராகவோ, அரசியல் பேசவோ, வாக்குக் கேட்கவோ வரவில்லை. எப்போதும்போல உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன். உங்களின் அன்பும் ஆதரவும்தான் எனக்கு அடித்தளம்.
இப்போதைக்கு உங்களுக்கு அரசியலும் கட்சியும் தேவையில்லை என்று நினைக்கிறேன். நன்றாகப் படித்து, வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும். உயர்ந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும். உங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
12-ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ரிக்ஷிதாவுக்கு தங்க நெக்லஸ் அணிவித்த முதல்வர்.
அதன்பிறகு நமது ஊர், சமூகம், தமிழ்நாடு குறித்து யோசிக்கலாம். உங்களை நம்பித்தான் உங்கள் பெற்றோரும், நமது சமூகமும் இருக்கிறது. நானும் உங்களை நம்பித்தான் இருக்கிறேன். ஏன், தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது.
ஒவ்வொருவரும் தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களைத் தடுக்கப் பலர் முயற்சி செய்யலாம். தடைகளைக் கண்டு துவண்டுவிடாமல், தடைகளைத் தாண்டி வெற்றி பெறுங்கள்.
உங்களது இலக்கில் உறுதியாக இருங்கள். அதேபோல், நண்பர்களுக்குள் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும்.
லஞ்சம், ஊழல் மற்றும் போதைப் பொருட்களின் பக்கம் சென்றுவிடாதீர்கள். எந்தத் தவறான பழக்கத்துக்கும் அடிமையாகக் கூடாது.
உங்களோடு நானும் இருக்கிறேன்; என்னோடு நீங்களும் இருக்கிறீர்கள். இந்தத் தொடர்பு எப்போதும் நீடிக்கும். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்; நல்லது மட்டுமே நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
அறுசுவை விருந்து
இவ் விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இதில், பனங்கருப்பட்டி பருத்திப்பால் அல்வா, ஸ்பெஷல் ரொட்டி மால்புவா, வாணியம்பாடி ஸ்பெஷல் கறிப்பலா பிரியாணி, ரைத்தா, சாதம், முருங்கைக்காய் சாம்பார், வெண்டைக்காய் காரக்குழம்பு, மிளகு ரசம், தென்னங்குருத்து பொரியல், உருளைக்கிழங்கு வறுவல், எரிசேரி, புடலங்காய் சில்லி, அப்பளம், ஜவ்வரிசி வடை, கருப்பு கவுனி அரிசி பாயாசம், மாங்காய் இஞ்சி ஊறுகாய், ஐஸ்கிரீம் ஆகியவை இடம் பெற்றிருந்தது. காலை உணவாக இட்லி, பொங்கல் வழங்கப்பட்டது.