தமிழகம்

‘இந்து விரோதமாக செயல்படுகிறார் விஜய்’ - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முன்னணி குற்றச்சாட்டு

மோகன் கணபதி

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ததன் மூலம் முதல்வர் விஜய்யின் அப்பட்டமான இந்து விரோத எண்ணம் வெளிப்பட்டு உள்ளதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக அரசு நேற்று (நவ. 21) இரவு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இதைக் கண்டித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து முதல்வர் ஜோசப் விஜய் சீராய்வு மனு தாக்கல் செய்வது அவரது தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து திமுக, விசிக, முஸ்லிம் அமைப்பகள், இடதுசாரி கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டன. அந்த கட்சிகள் இந்து விரோதிகள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. திமுக ஆட்சி செய்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் சர்வாதிகார ஆட்சி செய்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது. இதனால் மக்களின் நம்பிக்கையை இழந்து ஆட்சியை இழந்தனர். இவர்கள் ஆட்டிவித்ததால் ஆடிய அரசு அதிகாரிகள் சட்டத்தின் முன்பு தலை குனிந்து நின்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர்.

பாமகவின் சவுமியா அன்புமணி, புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

ஆனால், தவெக கட்சித் தலைவர்கள் மற்றும் அதன் தலைவரான ஜோசப் விஜய் ஆகியோர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து முடிவெடுப்போம் என்று நேற்று கூறினார்.

இதே நிர்மல் குமார், திருப்பரங்குன்ற தொகுதி வேட்பாளராக தேர்தல் பிரச்சாரம் செய்தபோது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீபம் ஏற்றும் விஷயத்தில் சட்டப்படி நடந்து நீதியை நிலைநாட்டுவோம் என்று பேசினார். ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஜோசப் விஜய் அவரை செயல்படுத்த வைப்பது முருக பக்தர்களுக்கு இழைக்கும் துரோகம்.

காவிரி நீர் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு விஷயத்தில், உடனே செயல்பட்டு தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால், இந்துக்களின் உரிமையை தடுக்க மட்டும் துடிக்கிறார் என்றால், அவருக்கு உள்ளே ஊறியிருக்கும் காரணம் என்ன என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கெட்டிக்காரனின் பொய் நாடகம் எட்டு நாளைக்கு என்பது பழமொழி. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மதங்களுக்கும் நாங்கள் பொதுவானவர்கள்; எல்லா மதமும் நம் மதம் என்று சினிமா வசம் போல் எழுதி கொடுத்ததை பொதுக்கூட்டத்தில் பேசி தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார் விஜய்.

ஆனால், இந்து விரோத திமுக அரசு திருப்பரங்குன்றம் விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தந்த தெளிவான தீர்ப்பை எதிர்த்து செய்த அப்பீலை விஜய் தொடர வைத்தார். அப்போதே, இவரது நம் மதம் வேடம் கலைந்தது. இப்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு செய்ததன் மூலம் இவரது அப்பட்டமான இந்து விரோத எண்ணம் வெளிப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், முஸ்லிம் பயங்கரவாத குற்றவாளிகளுக்கு விஜய் அரசு நீண்ட நாள் பரலோல் அளித்தது. அதுமுதல் தனது ஆட்சியை தக்க வைக்க எதுவும் செய்வார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

முருகனின் அருளால் இந்த தீய எண்ணம் கொண்ட தவெகவின் எண்ணம் பலிக்காது. இந்து முன்னணி இந்த நயவஞ்சகக் கூட்டத்தை எதிர்த்து சட்டம் மற்றும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை துணிந்து நடத்தும்.

நமது கோயிலில் நாம் தீபம் ஏற்ற எத்தனை தடைகள், எத்தனை போராட்டங்கள், எத்தனை உயிர் தியாகங்கள். எந்த விலை கொடுத்தும் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களான நாம் நமது உரிமையை மீட்டெடுப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் ஆர்த்தெழுந்து போராட வாருங்கள் என்று இந்து முன்னனி சார்பில் அறைகூவல் விடுகிறோம்.’ என தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT