நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
சென்னை: “ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் 100% பயிர்க்கடன் ரத்து என்று கூறிவிட்டு, தற்போது வெறும் ₹50,000 பயிர்க்கடன் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே 100% கடன் தள்ளுபடி செய்துள்ளீர்களே, இது அப்பட்டமான நம்பிக்கை துரோகமில்லையா?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றியவர் ஜோசப் விஜய். ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் 100% பயிர்க்கடன் ரத்து என்று கூறிவிட்டு, தற்போது வெறும் ₹50,000 பயிர்க்கடன் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே 100% கடன் தள்ளுபடி செய்துள்ளீர்களே, இது அப்பட்டமான நம்பிக்கை துரோகமில்லையா?. இதேபோலத் தான் தேர்தலின் போது அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் 500 யூனிட்டிற்கு கீழ் உபயோகித்தால் மட்டுமே என "இக்" வைத்தீர்கள்.
எதற்கு இத்தனை பித்தலாட்டங்கள்? இத்தனை பொய் வாக்குறுதிகள்? ஆசை காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றுமளவிற்கு முதல்வர் பதவி மீது உங்களுக்கு அப்படியென்ன வெறி?. காற்றில் கோட்டை கட்டுவது போல, நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றவே முடியாத வெறும் வாய் வார்த்தைகள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இதுதான் உங்கள் மாற்று அரசியலின் லட்சணமா?
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி, 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களையும் தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாஜக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.