தமிழகம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் இறந்தவர் உடலை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற வீடியோ வைரல்

இலவச அமரர் ஊர்தி வழங்க மக்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ராஜபாளையம்: ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் நள்ளி ரவில் இறந்தவர் உடலை ஆட்டோவில் தூக்கிச் சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இலவச அமரர் ஊர்தி வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனையில் தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 212 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவனையில், புதிதாக 227 படுக்கை வசதிகளுடன் பல்நோக்கு வளாகம் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக ரூ.40 கோடி மதிப்பில் ராஜபாளையம் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது.

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் இறந்தவர் உடலை ஆட்டோவில் ஏற்றிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப் பட்ட ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக ஒரு இலவச அமரர் ஊர்தி வாகனம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ராஜபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உமா கூறுகையில்: மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டை மருத்துவமனைகளில் இலவச அமரர் ஊர்தி வாகனம் உள்ளது. ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு தேவைப்படும் நேரங்களில் சிவகாசியில் இருந்து அமரர் ஊர்தி வாகனம் வர வழைக்கப்படும். ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு சுந்தர்ராஜபுரத்தில் இருந்து உடல் நலம் பாதித்த ஒருவரை, ஆபத்தான நிலை யில் மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்தபோது உயிரிழந்தது தெரியவந்தது.

மருத்துவர்கள் வேறு அவசர சிகிச்சையில் இருந்தபோது, உறவினர்கள் தன்னிச்சையாக இறந்தவர் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்றுள்ளனர், என்றார்.

SCROLL FOR NEXT