தூத்துக்குடி: வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் 2 பேருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, வேலை வாங்கித் தருவதாக காரில் அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அவரது நண்பர் தவெக நிர்வாகியான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அன்னை வி.ஜி.சரவணனுடன் இணைந்து கட்சி பணி செய்து வருகிறேன். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் என்பவர் அறிமுகமானார். அவர் என்னிடம் வி.ஜி.சரவணனின் லாட்டரி தொழில் மூலம் வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்காக ராமநாதபுரம் சென்று முகவர் ஒருவரை பார்க்க வரும்படியும் மே 3-ம் தேதி அழைத்துச் சென்றார்.
வழியில் சாயல்குடி அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இது தெரியாமல் குடித்ததில் மயக்க நிலையில் இருந்த என்னை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு விடுதி அறையில் அடைத்து வைத்து பாலாவும் மற்றொருவரும் சேர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதுகுறித்து கேட்டபோது, ‘உன்னை சரவணன்தான் அழைத்து வரச்சொன்னார் அவரிடம் கேட்டுக்கொள்’ என்றனர். பின்னர் அவரை தொடர்பு கொண்டு பேசும்போது, இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என்றார். அதன்பின்னர், ‘இதுபற்றி வெளியே கூறினால் உனது குழந்தையை கொலை செய்து விடுவோம்’ என வன்கொடுமை செய்த இருவரும் மிரட்டினர்.
இதுபற்றி அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ஜெகதீஸ்வரியிடம் புகார் தெரிவித்தேன். தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குற்றவாளிகள் இருவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
எம்எல்ஏ விளக்கம்: இந்த விவகாரம் குறித்து எம்எல்ஏ சரவணன் கூறுகையில், “பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் எனக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் சிலரது தூண்டுதலில் தவறான புகார் தெரிவிக்கிறார். குறிப்பிட்ட இருவர் கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏ என்ற முறையில் பலர் என்னோடு புகைப்படம் எடுப்பதுண்டு. அவர்கள் செய்யும் தவறுகளுக்கு எப்படி நான் பொறுப்பாக முடியும்” என்றார்.