கோவை: பொங்கல் பண்டிகை இயற்கை தந்த வரங்களுக்கு நன்றி சொல்லும் விழா என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை வந்தார்.
விமான நிலையத்தில் அவரை அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகர காவல் ஆணையர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், சி.பி.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சூரியனை வழிபடும் நாளாக பொங்கல் அமைந்தாலும், இயற்கை தந்த வரங்களுக்கெல்லாம் நன்றி சொல்லுகின்ற தமிழ் விழாவாகவும் அமைந்துள்ளது.
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, நேற்று இரவு திருப்பூரில் தங்கிய குடியரசு துணைத் தலைவர், திருப்பூரில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர், கோவை சிட்ரா சாலையில் உள்ள கேஎம்சிஹெச் மருத்துவமனையில் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். தொடர்ந்து, கொடிசியா அரங்கில் நடைபெறும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்வில் பங்கேற்கிறார்.பின்னர், இன்று இரவு 7 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.