

திண்டுக்கல்: சபரிமலையில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகர விளக்கு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் மகரஜோதியை வழிபட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியாக மகரஜோதி தரிசனம் திகழ்கிறது. மகரஜோதியை தரிசிக்க தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாலை அணிந்து, விரதமிருந்து வந்த ஐயப்ப பக்தர்கள், பொன்னம்பலமேட்டில் மகரஜோதியைக் காண நேற்று காலை முதலே திரண்டிருந்தனர்.
முன்னதாக, மகரஜோதியை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்க பாரம்பரிய ஆபரணங்கள் பந்தளத்தில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை சந்நிதானத்தை வந்தடைந்தது. திரு ஆபரணப்பெட்டி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டதால் காலை 10 மணி முதல் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல, காலை 11 மணி முதல் பக்தர்கள் பம்பையில் இருந்து சந்நிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஊர்வலம் சென்ற பிறகே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சந்நிதானம் வந்த திரு ஆபரணங்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, 18-ம் படி வழியே திரு ஆபரணப்பெட்டி கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. மகரஜோதி வழிபாட்டுக்கு முன்னோடியாக நேற்று மாலை மகர சங்கிரம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. பக்தர்கள் சரணகோஷம் முழங்க ஐயப்பனை வழிபட்டனர்.
தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் ஜோதி தெரிந்ததும், சபரிமலையில் திரண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் சரணகோஷங்கள் முழங்க தரிசித்தனர். பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மேலும், வண்டிப்பெரியாறு, புல்மேடு, பஞ்சாலிமேடு, சத்திரம், பருந்துப்பாறை, அய்யன்மலை, நீலிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.
மகரஜோதியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மகரஜோதியை தரிசித்த பக்தர்கள், புல்மேட்டில் இருந்து சத்திரம், வல்லக்கடவு வழியாக சந்நிதானம் சென்றனர். இரவு 11 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவ. 30-ம் தேதி நடை திறக்கப்பட்டு தொடர்ந்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. மண்டல, மகரவிளக்கு விழாக்களில் இதுவரை 52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.