பசும்பொன் தேவர் நினைவிடத்திலிருந்து ஹெலிபேடு தளம் வரை அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள்.

 
தமிழகம்

அக்.30-ல் தேவர் குருபூஜை விழா: குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு - முதல்வர் விஜய் வருகை?

கி.தனபாலன்

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளார். தமிழக முதல்வரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது.

அன்றைய தினம் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு மரியாதை செலுத்துவர். இதற்காக மாவட்ட நிர்வாகம் ரூ.2.17 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது.

அக்.28 முதல் 30-ம் தேதி வரை மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் தெரிவித்தார்.

மேலும், பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய் ஆகியோர் பங்கேற்று மாரியாதை செலுத்த உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இது குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் கூறும்போது, “குடியரசு துணைத் தலைவர் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளார். தமிழக முதல்வர் வருகை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை” என தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடம் அருகேயுள்ள ஹெலிபேட் தளம் சீரமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹெலிபேட் தளம் முதல் நினைவிடம் வரை இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இங்கு மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT