மதுரை: “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு விவகாரத்தில் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தப்படும்” என விஸ்வ ஹிந்து பரிசத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தெரிவிதுள்ளார்.
மதுரையில் அவர் இன்று கூறியதாவது: முந்தைய இந்து விரோத திமுக ஆட்சியில் கோயில் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுள்ளது. பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்ததில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தினசரி பூஜை நடத்த அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் முந்தைய திமுக ஆட்சியில் தனியாருக்கு தாரைவாக்கப்பட்ட விவகாரம் வெளியில் வந்துள்ளது. இதுபோல இன்னும் எத்தனை கோயில்களில் முந்தைய இந்து விரோத திமுக ஆட்சி காலத்தில் கோயில் நிலங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது என்று தெரியவில்லை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்ததில் யார் முக்கிய குற்றவாளிகளையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் கோயில் நிலங்கள் சூறையாடப்படாது.
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும் முந்தைய திமுக அரசு போல இல்லாமல் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் அதனுடைய தற்போது நிலை, வேறு கோயில் நிலங்கள் தாரைவாக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஐஏஎஸ் அதிகாரி, மடாதிபதி தலைமையில் ஆன்மிக பக்தர்கள் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். தவறினால் இந்து அறநிலைத்துறை அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.