தமிழகம்

மதுரை எம்பி சு.வெங்கடேசன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விஎச்பி வலியுறுத்தல்

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பேசிய, மதுரை மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் கடந்த ஏழு ஆண்டுகளாக எம்பியாக உள்ள மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் நகரின் வளர்ச்சிக்கு எந்தவிதமான திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மதுரை விமான நிலைய விரிவாக்கம், கூடுதல் ரயில்வே வசதிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளையும் எம்பி வெங்கடேசன் செய்து கொடுக்கவில்லை.

கூட்டணி பலத்தில் வெற்றி பெற்றுள்ள வெங்கடேசன் தமிழக, மதுரை வளர்ச்சிக்கு குரல் கொடுப்பார் என்பதை எதிர்பார்க்க முடியாது. வெறும் அறிக்கை வாயிலாக தான் எம்பியாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொண்டு வரும் வெங்கடேசன் இனி அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்கு எதிராகவே செயல்படும் வெங்கடேசன் இந்துக்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்படுவதை இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் திருக்கார்த்திகை திருத்தீபம் ஏற்றுவது தொடர்பாக தான் தெரிவித்த கருத்தை வெங்கடேசன் வாபஸ் பெற வேண்டும்.

இந்துக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மதுரை உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் விதத்தில் பேசிய வெங்கடேசன் எம்பி மீது நீதிமன்ற அவமதிப்பை தானாக முன்வந்து எடுத்து விசாரிக்க வேண்டும்.

தொடர்ந்து இந்துக்களுக்கு விரோதமாக எம்பி வெங்கடேசன் பேசினால் விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில் அவரது வீடு, அலுவலகத்தில், இந்து அமைப்புகளை திரட்டி முற்றுகை இடப்படும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, சு.வெங்கடேசன் எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில், “கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லா வகையிலும் முயலுகிறார்கள். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு.

இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT