ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் 
தமிழகம்

இடைத்தரகர்கள் பிடியில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தங்கும் விடுதி: விஹெச்பி புகார்

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி, இடைத்தரகர்கள் பிடியில் உள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் புகார் தெரிவித்துள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ராமநாத சுவாமி கோயில் நிதி ரூ. 46 கோடியில் தங்கும் விடுதி அமைத்து, 2021-ல் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி எனும் பெயரில் திறக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

ஆனால், இந்த விடுதியை பக்தர்களின் கருத்தை கேட்காமல், 2023 முதல் தமிழக சுற்றுலாத் துறையிடம் இந்துசமய அறநிலையத் துறை ஒப்படைத்தது. ஏழை, நடுத்தர பக்தர்கள் நலன் கருதி அமைத்த இந்த விடுதியை ஆன்லைன் புக்கிங் என்ற பெயரில் இடைத்தரகர்கள் மூலம் அனைத்து அறைகளும் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.

மேலும் விடுதியில் தங்க நேரில் வரும் பக்தர்களிடம் இடைத்தரகர்கள் சிலர் பேரம் பேசி கூடுதல் கட்டணத்தில் தங்க அனுமதிக்கின்றனர். இதனால் ஏழை பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பக்தர்கள் நலன் கருதி யாத்திரி நிவாஸை மீண்டும் இந்து சமய அறநிலையத் துறை மீட்டு நிர்வகிக்க வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT