தமிழகம்

வெற்றி வீடு திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு

கிராமப்புற ஏழைகளுக்காக ரூ.3,500 கோடியில் 70,000 வீடுகள்

மோகன் கணபதி

சென்னை: கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கில் வெற்றி வீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட் உரையில், “வலுவான அடிப்படைக் கட்டமைப்பும், நிலையான வளர்ச்சியும் இணைந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, கிராமப்புற வறுமையை முற்றிலும் ஒழித்து, அனைவருக்கும் கண்ணியமான வாழ்வாதாரத்தை உறுதி செய்யக்கூடிய கிராமப்புறச் சூழலை உருவாக்குவதே அரசின் தொலைநோக்குப் பார்வையாகும்.

இந்த அரசு எதிர்கொண்டுள்ள இடர்பாடுகளில் முதன்மையானது மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது, ஊரகப் பகுதிகளில் வாழும் வீடற்ற ஏழைக் குடும்பங்களுக்கு நிலையான வீட்டு வசதியை உறுதி செய்வதாகும். கடந்த முப்பது ஆண்டுகளாக மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும், தமிழ்நாடு இன்னும் குடிசைகள் அற்ற மாநிலமாக மாறவில்லை.

போதுமான நிதி இல்லாமை, பயனாளிகளைத் தேர்வு செய்வதில் ஏற்படும் சேர்த்தல் மற்றும் நீக்கல் பிழைகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நிலப் பற்றாக்குறை ஆகியவை இதில் நிலவும் முக்கிய இடர்பாடுகளாக உள்ளன. எனவே, இப்பிரச்சினைக்கு படிப்படியாகத் தீர்வு காணும் விதமாக புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது.

வீட்டிற்கான அலகுத் தொகை குறைவாக நிர்ணயிக்கப்படுவதால், உண்மையில் மிகவும் தகுதிவாய்ந்த ஏழைக் குடும்பங்கள் வீடு வழங்கும் திட்டங்களிலிருந்து விலக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் செலவை ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்ட குடும்பங்கள்தான் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

இதனைத் தவிர்க்கும் வகையில், இப்புதிய வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக வீடு ஒன்றிற்கான அலகுத் தொகையை 3.10 இலட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

முதல் ஆண்டிலேயே, 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். தகுதியான குடும்பங்களை அடையாளம் காண்பதற்கு, ஊரக வளர்ச்சித் துறையால் புதிதாக வீடுதோறும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

ஊரக வளர்ச்சித் துறை பல ஆண்டுகளாகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், அவற்றில் பல திட்டங்களுக்கு இடையே பணிகள் ஒரே தன்மையில் இருப்பதும், ஒருங்கிணைந்த திட்டமிடல் இல்லாமையும் காணப்படுகிறது.

எனவே, ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து உட்கட்டமைப்புத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு கிராமப்புற அதிகாரமளித்தல், மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு (TN.VETRI) என்ற விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம், கிராமப்புற இணைப்புச் சாலைகள் ஆகியவற்றிற்கென தனித் துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நகர்ப்புறத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கான (Peri-urban Panchayats) அடிப்படைக் கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு வெற்றித் திட்டத்தின் (TN-VETRI) , 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ஒரு தனித் துணைத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், மலைப்பகுதி ஊராட்சிகளின் மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ஒரு தனித் துணைத்திட்டம் செயல்படுத்தப்படும்.

'தமிழ்நாடு கிராமப்புற அதிகாரமளித்தல், மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்புத் திட்டம் ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் பிற துறைகளின் தேவை மற்றும் வளங்களையும், ஒன்றிய அரசின் திட்டங்களையும் ஒருங்கிணைக்கும். இவ்வொருங்கிணைப்பை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் தலைமையிலான ஓர் உயர்மட்டக் குழு உறுதி செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT